வால்பாறையில் ரே‌ஷன்அரிசி மூட்டைகளை தூக்கி வீசி காட்டுயானைகள் அட்டகாசம்

வால்பாறையில் காட்டுயானைக்கூட்டம் ரேசன்கடையின் சுவரை இடித்து தள்ளி அரிசிமூட்டைகளை தூக்கி வீசி அட்டகாசம் செய்தன.

Update: 2017-11-03 22:00 GMT

வால்பாறை,

வால்பாறை அருகே உள்ள மாணிக்கா எஸ்டேட்(என்.சி) பிரிவு குடியிருப்பு பகுதிக்குள் அதிகாலை 3 மணிக்கு 5 காட்டு யானைகள் புகுந்தன. இந்த நிலையில் அந்த யானைகள் குடியிருப்பின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிந்தாமணி ரேசன்கடையின் சுவரை இடித்து தள்ளி, உள்ளே துதிக்கையை விட்டு, அங்கு அடுக்கி வைக்கப்பட்ட அரிசி மூட்டைகளை ஒவ்வொன்றாக தூக்கி எடுத்து வெளியே வீசின. பின்னர் அதில் இருந்த அரிசியை தின்று அட்டகாசத்தில் ஈடுபட்டன. இது குறித்து அந்த பகுதி மக்கள் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் எஸ்டேட் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து கூச்சலிட்டு யானைகளை விரட்டினர். ஆனால் யானைகள் அங்கிருந்து செல்லாமல் அடம் பிடித்தன.

பின்னர் அந்த யானைகள் அங்குள்ள பஸ்நிறுத்தம் பகுதியிலிருந்த அப்துல் கரீம் என்பவரின் டீக்கடையின் கதவை இடித்து தள்ளி, துதிக்கையை உள்ளே விட்டு கடையிலிருந்த மிட்டாய்ஜாடிகளை உடைத்து சேதப்படுத்தின. அருகில் உள்ள இஞ்சிப்பாறை, மாணிக்கா எஸ்டேட் பகுதியின் இடைச்சோலை வனப்பகுதிக்குள் போய்நின்று கொண்டிருக்கிறது. இதே போல தாய்முடி எஸ்டேட்(எம்.டி) பிரிவு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த குட்டிகள் உட்பட 12 யானைகள் கூட்டம், தாய்முடி எஸ்டேட் தொடக்கப்பள்ளிக்கூடத்தின் சுற்றுச்சுவரை உடைத்து சேதப்படுத்தின.

தொடர்ந்து அந்த யானைகள் தாய்முடி எஸ்டேட் (எம்.டி) குடியிருப்புக்கு அருகில் இருக்கும் 5–ம் நம்பர் தேயிலைத் தோட்ட பகுதியில் முகாமிட்டு நின்று வருகின்றன. இதனால் அந்த பகுதியில் தேயிலை இலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது. யானைகள் குடியிருப்புக்கு அருகிலேயே நிற்பதால் குடியிருப்பு பகுதி மக்களும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்