கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2017-11-03 22:15 GMT

கடலூர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை பா.ஜ.க.வினர் தாக்கியதை கண்டித்தும், திருமாவளவனை தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகில் கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கடலூர் மாவட்ட மேலிட பொறுப்பாளர் பாவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் முல்லைவேந்தன் (கிழக்கு), கதிர்வாணன் (மேற்கு), பால.அறவாழி (தெற்கு), சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன், மாவட்ட பொருளாளர் கெய்க்வாட்பாபு, சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, ஆதித்த.கரிகாலன், வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செந்தில் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்திய யூனியன் முஸ்லிம் இயக்க மாவட்ட தலைவர் ராஜாரகிமுல்லா உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் மருதமுத்து, மாநில நிர்வாகிகள் பெ.பாவாணன், குணத்தொகையன், ஸ்ரீதர், சொக்கு, மாவட்ட துணை செயலாளர் திருமேனி உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மத்திய அரசுக்கு எதிராகவும், தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவரை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசை கண்டித்து நேற்று கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மதியம் 1.50 மணி அளவில் வேதாரண்யத்தில் இருந்து அந்த தொகுதி பாரதீய ஜனதா கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம் சென்னை நோக்கி சென்றார். அவர் பாரதீய ஜனதா கட்சி கொடியுடன் காரில் சென்றதை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் போட்டிருந்த நாற்காலிகளை தூக்கி வீசினர். இதில் ஒரு நாற்காலி அவர் கார் கண்ணாடி மீது விழுந்தது. இதை பார்த்ததும் டிரைவர் காரை நிறுத்தினார். ஆனால் யாரும் காரில் இருந்து இறங்கவில்லை. அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்ட வேதரத்தினம் இது பற்றி கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்