சிங்கம்புணரி பகுதியில் நிலக்கடலை விளைச்சல் அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

சிங்கம்புணரி பகுதியில் நிலக்கடலை விளைச்சல் அதிகரித்துள்ளதால், அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2017-11-03 05:15 GMT
சிங்கம்புணரி,

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் நெல், பயிறு வகை உள்பட பயிர்கள் சாகுபடி குறைந்தது. அதேவேளையில் வறட்சி காரணமாக பயிரிட்டிருந்த பயிர்களும் கருகி போனது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டு மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது கோடை மற்றும் தென்மேற்கு பருவமழை காலத்தில் ஓரளவு மழை பெய்துள்ளது. இதனை பயன்படுத்தி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சோளம், கேழ்வரகு, பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்தனர். இதேபோல் சிங்கம்புணரி பகுதியிலும் சோளம், நிலக்கடலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. இப்பகுதியில் அதிக அளவு நிலக்கடலை பயிர் சாகுபடி செய்யப்பட்டது.

நிலக்கடலை

சிங்கம்புணரி மட்டுமின்றி அருகே உள்ள பிரான்மலை, மேலவண்ணாயிருப்பு, ஓடுவன்பட்டி மற்றும் எஸ்.புதூர் பகுதிகளில் நிலக்கடலை பயிரிடப்பட்டன.

தற்போது சிங்கம்புணரி பகுதியில் நிலக்கடலை பயிர் விளைச்சல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனையடுத்து நிலக்கடலை பயிர்களை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரான்மலை, மேலவண்ணாயிருப்பு பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நிலக்கடலையை தரம் பிரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

விளைச்சல் அதிகரிப்பு

இதுகுறித்து பிரான்மலையை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:- கடந்த 3 மாதங்களாக இப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்தது. இதனால் தொடர்ந்து மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் இப்பகுதி விவசாயிகள் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை பயிரை சாகுபடி செய்தனர். தற்போது இப்பகுதியில் நிலக்கடலை பயிர் விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும் கூடுதல் மகசூலும் கிட்டியுள்ளது. இதனால் நல்ல லாபம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள் அனைவரும் நிலக்கடலை அறுவடை செய்யும் பணியிலும், சில விவசாயிகள் அறுவடை செய்த நிலக்கடலையை தரம் பிரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். முந்தைய ஆண்டுகளில் சாகுபடி செய்த நிலக்கடலை பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாமல் சிறுத்து காணப்பட்டன. இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்து நிலக்கடலை நன்கு முற்றிய நிலையில் உள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு நிலக்கடலை விளைச்சல் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்