முதுகுளத்தூர் அருகே தண்ணீரில் மூழ்கி 2 சிறுமிகள் பலி

முதுகுளத்தூர் அருகே விளையாட சென்றபோது தண்ணீரில் மூழ்கி 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2017-11-03 04:57 GMT
முதுகுளத்தூர்,

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே பூக்குளம் கிராமத்தை சேர்ந்த வெள்ளைமயில் என்பவருடைய மகள் அனுஷ்கா (வயது 8). அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். இதே பகுதியை சேர்ந்த மலைமேகு என்பவருடைய மகள் வர்சிகா(6). இந்த சிறுமி இதே பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுவிட்டு வந்து மாலையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் தவறி விழுந்து 2 பேரும் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விளையாடச் சென்ற 2 சிறுமிகளும் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவர்களுடைய பெற்றோர்கள் தேடி வந்தனர். மேலும் இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் 2 சிறுமிகளின் உடல்கள் நேற்று பள்ளத்தில் தேங்கிய இருந்த தண்ணீரில் மிதந்தன. இதை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து இளஞ்செம்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

வழக்குப்பதிவு

அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவி, இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் சத்திராதேவி மற்றும் போலீசார் விரைந்து சென்று சிறுமிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிகள் பலியான சம்பவம் குறித்து தகவல் அறிந்த மலேசியா பாண்டியன் எம்.எல்.ஏ., யாதவர் சங்க தலைவர் தெய்வேந்திரன் ஆகியோர் அவர்களது பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர். 

மேலும் செய்திகள்