கவர்னர் கிரண்பெடி புகார் எதிரொலி: தலைமை செயலாளர் அதிரடி மாற்றம் அஸ்வின்குமார் நியமனம்

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடியின் புகார் எதிரொலியாக தலைமை செயலாளர் மனோஜ் பரிதா அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்குப் பதில் புதிய தலைமை செயலாளராக அஸ்வின் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2017-11-02 23:15 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி அரசின் தலைமை செயலாளராக மனோஜ் பரிதா பணியாற்றி வந்தார்.


மத்திய அரசின் இணை செயலாளராக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனோஜ் பரிதாவுக்கு அந்தஸ்து வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் அவர், புதுச்சேரியில் இருந்து டெல்லி செல்லாமல் இங்கேயே பணியாற்றி வந்தார். அரசு நிர்வாகம் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளில் கவர்னர் கிரண்பெடி மற்றும் முதல் - அமைச்சர் நாராயணசாமி இடையே மோதல் ஏற்பட்டது.

இந்தநிலையில் தலைமை செயலாளர் மனோஜ் பரிதா முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு ஆதரவாக செயல்படுவதாக கவர்னர் கிரண்பெடி கருதினார். கவர்னரின் ஆதரவு அதிகாரியாக இருந்த புதுவை நகராட்சி ஆணையர் சந்திரசேகர் சபாநாயகர் உத்தரவின் பேரில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். சபாநாயகர் உத்தரவின் பேரில் அவரை காத்திருப்போர் பட்டியலில் வைப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார்.

கவர்னரின் ஒப்புதல் பெறாமல் தலைமை செயலாளர் அறிவித்த இந்த அறிவிப்பு செல்லாது என்று கவர்னர் கிரண்பெடி தனது செயலாளர் மூலம் குறிப்பு ஆணை அனுப்பினார். ஆனால் கவர்னரின் அந்த ஆணை நிறைவேற்றப்படவில்லை. தொடர்ந்து நகராட்சி ஆணையர் சந்திரசேகர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

இது தலைமை செயலாளர் மீதான கோபத்தை கவர்னர் கிரண்பெடிக்கு இன்னும் அதிகரிக்கச் செய்தது. தொடர்ந்து தலைமை செயலாளர் குறித்து கவர்னர் கிரண்பெடி சமூக வலைதலைங்களில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டார். டெல்லி பயணம் மேற்கொள்ளும் போது தலைமை செயலாளர் மனோஜ் பரிதாவை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தில் கவர்னர் கிரண்பெடி பலமுறை புகார் தெரிவித்து வந்தார்.

இதையொட்டி கவர்னர் கிரண்பெடிக்கும், தலைமை செயலாளர் மனோஜ் பரிதாவுக்கும் இடையே நிர்வாக ரீதியில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டது. இதனால் கவர்னர் கிரண்பெடியை நேரில் சந்திப்பதையே தலைமை செயலாளர் மனோஜ் பரிதா தவிர்த்து வந்தார்.

இந்தநிலையில் சென்டாக் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாகவும் இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் கவர்னர் கிரண்பெடி சி.பி.ஐ.க்கு பரிந்துரை செய்திருந்தார். இதன்பேரில் கல்வித்துறை செயலாளரும், சென்டாக் தலைவருமான ஐ.ஏ.எஸ். அதிகாரி நரேந்திரகுமார் உள்பட 7 அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இது கவர்னரின் பரிந்துரையின் பேரிலேயே நடந்ததால் புதுவை அரசு உயர் அதிகாரிகள் மட்டத்தில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழ் நிலையில் தற்போது அடுத்த அதிரடியாக தலைமை செயலாளராக இருந்த மனோஜ் பரிதா டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக புதுச்சேரி மாநில தலைமை செயலாளராக அஸ்வின் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டெல்லியில் தலைமை செயலாளராக பணியாற்றி வந்தவர் ஆவார்.

இதேபோல் புதுவை வளர்ச்சி ஆணையர் நரேந்திரகுமாரும் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அந்த பதவிக்கு புதுவையில் கலெக்டராக பணியாற்றிய அன்பரசு நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் செய்திகள்