மழைக்காலத்தில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுவதால் சாக்கடை கால்வாய் வசதி கேட்டு பொதுமக்கள் மறியல்

மழைக்காலத்தில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுவதால் சாக்கடை கால்வாய் வசதி கேட்டு திண்டுக்கல்லில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-02 22:45 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சியின் 36-வது வார்டு பகுதிகளை சேர்ந்த மக்கள் சாக்கடை கால்வாய் வசதி கேட்டு, நாகல்நகர் ஆர்.எஸ்.சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் திண்டுக்கல் வடக்கு போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம், பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், கசில்வா தெருவில் சாக்கடை கால்வாய் மிகவும் சிறியதாக உள்ளது.

இதனால் கழிவுநீர் செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சந்தைரோட்டில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து கசில்வா தெரு கால்வாய்க்கு கழிவுநீர் வருகிறது. எனவே, சாக்கடை கால்வாய் கழிவுநீரால் நிரம்பி காட்சி அளிக்கிறது. அதேபோல் அப்பியா தெருவிலும் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது.

இதன் காரணமாக மக்கள் வீடுகளில் வசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இந்த நிலையில் மழைக்காலத்தில் மழை தண்ணீருடன், கழிவுநீரும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் மக்கள் வீடுகளில் வசிக்க முடியவில்லை. தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, புதிதாக சாக்கடை கால்வாய் கட்டித் தரும்படி மாநகராட்சியில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, கனமழை பெய்யும் முன்பு சாக்கடை கால்வாய் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக நாகல்நகரில் சுமார் 30 நிமிடங்கள் வாகன போக்குவரத்து தடைப்பட்டது. 

மேலும் செய்திகள்