கரூரில் மத்திய, மாநில அரசை கண்டித்து 6, 8-ந் தேதிகளில் ஆர்ப்பாட்டம்

கரூரில் மத்திய, மாநில அரசை கண்டித்து வருகிற 6, 8-ந் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2017-11-02 22:45 GMT
கரூர்,

கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கரூர் கலைஞர் அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். குளித்தலை எம்.எல்.ஏ. ராமர், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் வக்கீல் மணிராஜ், மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க. உயர்மட்டக்குழு உறுப்பினர் கே.சி.பழனிசாமி, மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் தமிழக அரசு நேற்று முன்தினம் முதல் ரேஷன் கடைகளில் ரூ.13.50-க்கு விற்பனை செய்த சர்க்கரையை கிலோ ரூ.25 ஆக உயர்த்தியுள்ளது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழக அரசு ரேஷன் கடைகளில் சர்க்கரை விலையை உயர்த்தியதை திரும்ப பெறக்கோரி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் தி.மு.க. சார்பில் வருகிற 6-ந் தேதி (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி எந்தவித முன்அறிவிப்பும் இன்றி ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. அதன்பின் சேவை மற்றும் சரக்கு வரியை (ஜி.எஸ்.டி) விதித்தது. இதனை கண்டித்து கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கருப்பு உடை அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கந்து வட்டி கொடுமையால் தென்காசி அருகே உள்ள காசிதருமத்தை சேர்ந்த இசக்கிமுத்து, அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். எனவே தமிழக அரசு கந்து வட்டி தொழிலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து அதனை தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள், பள்ளி மாணவ- மாணவிகள், இளைஞர்கள் என பாகுபாடு இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் மரணம் அடைந்துள்ளனர். டெங்கு காய்ச்சலை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் எம்.ரகுநாதன், கே.கருணாநிதி, ஆர்.கந்தசாமி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவி ராஜா, மாவட்ட துணை செயலாளர் ரமேஷ்பாபு, பொருளாளர் கருப்பண்ணன், நகர செயலாளர்கள் கணேசன், வக்கீல் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் வி.கே.டி.ராஜ்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கரூர் மத்திய நகர செயலாளர் எஸ்.பி.கனகராஜ் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்