தர்மபுரி நகரில் டெங்கு கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை கலெக்டர் நேரில் ஆய்வு

தர்மபுரி நகரில் டெங்கு கொசுக்களை ஒழிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர நடவடிக்கைகளை கலெக்டர் விவேகானந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2017-11-02 23:00 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் டெங்குகாய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி நகராட்சி பகுதியில் டெங்கு கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி தனியார் காலிமனைகள், குடியிருப்பு பகுதிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கொசுப்புழுக்களை உருவாக்கும் வகையில் தேங்கியுள்ள குப்பைகள், கழிவு பொருட்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். நகராட்சி பகுதியில் டெங்குகாய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் உருவாவதை தடுப்பதற்கான ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புறநகர் பஸ்நிலையம், டவுன்பஸ் நிலையம் மற்றும் தர்மபுரி நகரில் உள்ள சினிமா தியேட்டர்களில் உதவி கலெக்டர் ராமமூர்த்தி மேற்பார்வையில் நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கொசுக்கள் ஒழிப்பு பணியினை கலெக்டர் விவேகானந்தன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பஸ்நிலையங்களில் கொசுக்கள் உருவாகும் வகையில் பொது இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதா? என்பது குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களுடன் சென்று பார்வையிட்டார். அப்போது அந்த பகுதியில் கழிவுநீர்கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துப்புரவு பணியின்போது டெங்குகொசுக்களை கண்டறிவதற்காக 56 டார்ச் லைட்டுகளை துப்புரவு பணியாளர்களுக்கு கலெக்டர் விவேகானந்தன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகுமார், சுகாதார அலுவலர் இளங்கோவன், துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், நாகராஜ், சுசீந்திரன், நகராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்