அரசு ஆஸ்பத்திரியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சிகிச்சை அளிக்க மூத்த டாக்டர்கள் இல்லை விளக்கம்கேட்டு நோட்டீஸ்

அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சிகிச்சை அளிக்க மூத்த டாக்டர்கள் யாரும் இல்லாத பிரச்சினை குறித்து விளக்கம்கேட்டு

Update: 2017-11-02 21:30 GMT

மும்பை,

அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சிகிச்சை அளிக்க மூத்த டாக்டர்கள் யாரும் இல்லாத பிரச்சினை குறித்து விளக்கம்கேட்டு டீன், சூப்பிரண்டுகளுக்கு மாநில இணை மருத்துவ இயக்குனர் பிரகாஷ் வாக்டே நோட்டீஸ் அனுப்பு உள்ளார்.

மூத்த டாக்டர்கள் இல்லை

மராட்டிய மாநில உணவு பொருள் வழங்கல் துறை முதன்மை செயலாளராக இருப்பவர் மகேஷ் பாதக். இவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனடியாக அதிகாரியின் மனைவி அவரை சி.எஸ்.டி.யில் உள்ள செயின்ட் ஜார்ஜ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அதிகாரி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். எனினும் அவருக்கு சிகிச்சை அளிக்க அங்கு மூத்த டாக்டர்கள் யாருமில்லை.

உதவி டாக்டர்கள் மட்டுமே இருந்தனர். மேலும் அதிகாரியின் மனைவியால் மூத்த டாக்டர்கள் யாரையும் தொடர்பு கொள்ளமுடியவில்லை.

தொடர்பு கொள்ள முடியவில்லை

இது குறித்து அறிந்த மாநில இணை மருத்துவ இயக்குனர் பிரகாஷ் வாக்டே முதன்மை செயலாளர் மகேஷ் பாதக்கிற்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக செயின்ட் ஜார்ஜ் ஆஸ்பத்திரி, ஜே.ஜே. ஆஸ்பத்திரி மூத்த டாக்டர்களை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் யாரையும் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. சிலர் செல்போனை எடுக்கவில்லை. சிலரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் முதன்மை செயலாளர் மகேஷ் பாதக் அன்று மாலை ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு ஜே.ஜே. ஆஸ்பத்திரி முன்னாள் டீன் லகானே உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

நோட்டீஸ்

ஞாயிற்றுக்கிழமை அன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கே சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் மூத்த டாக்டர்கள் யாரும் இல்லாத நிலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து விளக்கம்கேட்டு ஜே.ஜே. ஆஸ்பத்திரி டீன் எஸ்.டி. நனந்கர், மருத்துவ சூப்பிரண்டு சஞ்சய் சுராசே மற்றும் செயின்ட் ஜார்ஜ் ஆஸ்பத்திரி மருத்துவ சூப்பிரண்டு மதுக்கர் கெய்க்வாட் ஆகியோருக்கு இணை மருத்துவ இயக்குனர் பிரகாஷ் வாக்டே நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

மேலும் செய்திகள்