ரூ.1 கோடி கேட்டு நிதி நிறுவன அதிபரை கடத்திய வழக்கில் 9 பேர் கைது

கிருஷ்ணகிரியில் ரூ.1 கோடி கேட்டு நிதி நிறுவன அதிபரை கடத்திய வழக்கில் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-11-02 22:15 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் உள்ள சத்ய சாய் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 44). இவர் கிருஷ்ணகிரியில் கோ-ஆப்ரேட்டிவ் காலனி 2-வது கிராஸ் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி அலுவலகத்திற்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை.

இது தொடர்பாக அவரது மனைவி சரளா கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் அவரை மர்ம நபர்கள் கடத்தி ரூ.1 கோடி கேட்டதாகவும், கடைசியாக ரூ.30 லட்சம் கொண்டு வரச்சொல்லி செந்தில்குமாரின் குடும்பத்தை மிரட்டியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

9 பேர் கைது

அந்த கும்பலை பிடிக்க போலீசார் முடிவு செய்து, அவர்களை தேடினார்கள். இந்த நிலையில் மர்ம கும்பல் செந்தில்குமாரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார்கள். காயத்துடன் செந்தில்குமாரை போலீசார் மீட்டனர். பின்னர் அவர் தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் விசாரணையில் செந்தில்குமாரை கடத்தியது கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கடத்தல் கும்பல் என்பது தெரிய வந்தது. இதையடுத்து கடத்தல் கும்பலை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களின் பெயர் விவரம் வருமாறு:- போண்டா வடிவேலு (38), வாஞ்சி என்கிற சதீஷ் (25), கார்த்திக் (23), சபரிநாதன் (23), ராஜேந்திரன் (27), நிஷாந்த் (21), நசீர் (36), பெரியசாமி (42), டைல்ஸ் வடிவேலு (36).

இவர்கள் 9 பேரும் கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி, அண்ணா நகர், பூந்தோட்டம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். கைதான 9 பேர் மீதும், கூட்டமாக வருதல், களகம் விளைவித்தல், ஆபாசமாக திட்டுதல், தாக்குதல், கொலை மிரட்டல், கடத்தல் உள்பட 9 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் 9 பேரையும் போலீசார் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்