ஓ.என்.ஜி.சி. ஆய்வு பணிகளை நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்துவோம் டி.டி.வி. தினகரன் எச்சரிக்கை

ஓ.என்.ஜி.சி. ஆய்வு பணிகளை நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று டி.டி.வி. தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2017-11-02 23:00 GMT
தஞ்சாவூர்,

அ.தி.மு.க. (அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சையில் நிருபர்களிடம்கூறியதாவது:-

தமிழக அரசு செயல்படவே இல்லை. டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் எவ்வாறு கோட்டை விட்டனரோ? அதே போல மழை வெள்ள பாதிப்புகளை தடுப்பதிலும் கோட்டை விட்டு விட்டனர். நாம் அச்சப்பட்டது போல் உயிர்பலிகள் நடக்க ஆரம்பித்து விட்டது. இனியாவது இந்த அரசு விழித்துக்கொண்டு உயிர்பலிகள் அல்லாமல், மழைநீர் தேங்குவதால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கை.

மத்திய அரசுடன், ஜெய லலிதா சுமூக உறவு இருக்க வேண்டும் என்று நினைத்தார். அது போல எந்த அரசும் மத்திய அரசுடன் சுமூகமாக இருக்க வேண்டும் என்று தான் எண்ணுவார்கள். இங்கு ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அரசு துரோகத்தின் உச்சகட்டத்தில் உள்ள அரசு. அவர்களுக்கு பெரும்பான்மை இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். தங்களை காப்பாற்றிக்கொள்ள மத்திய அரசின் பெயரை தவறாக உபயோகிக்கிறார்கள்.

மத்திய அரசின் பெயரை, பிரதமர் பெயரை முதல்-அமைச்சர் உள்பட அனைத்து அமைச்சர்களும் ஏதோ கூறிக்கொண்டு, மத்திய அரசு ஆதரவு தங்களுக்கு தனிப்பட்ட முறையில் இருப்பது போல காட்டிக்கொண்டு எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக்கொள்ளவும், போலீஸ் அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு தாங்கள் நினைத்ததை செய்வதற்காக இது போன்ற கபட நாடகங்களை ஆடுகிறார்கள். நிச்சயம் இந்த ஆட்சி கோர்ட்டு தீர்ப்பின்படி ஓட்டெடுப்பு நடத்தி வீட்டிற்கு அனுப்பப் படும். அப்போது மத்திய அரசின் ஆதரவு உள்ளதா? என்பது தெரியும்.

கவர்னர் புதிதாக வந்துள்ளார். ஆனால் இந்த ஆட்சி பெரும்பான்மை நிரூபிப்பது குறித்த தி.மு.க. தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. ஏற்கனவே நீதிபதி கூறியதைபோல் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை முடிவு செய்யாமல் வாக்கெடுப்பு நடத்தக்கூடாது. தைபிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். அது போல தை பிறந்தால் தமிழகத்திற்கு நல்ல செய்தி கிடைக்கும். மக்கள் விரோத ஆட்சி விரைவில் வீட்டிற்கு செல்லும்.

மன்னார்குடி, நாகை பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. நடவடிக்கையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும். வைரமே கிடைத்தாலும் கூட அதை விட உயர்வானது உணவு. எனவே உணவுத்துறை பாதிக்காத வகையில் மத்திய, மாநில அரசுகள், அது யாராக இருந்தாலும் செயல்பட வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் புதிதாக ஓ.என்.ஜி.சி. ஆய்வுபணிகளை மேற்கொள்ளவதாக இருந்தால் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தஞ்சை மாவட்ட மக்களோடு சேர்ந்து அ.தி.மு.க. (அம்மா அணி) பொதுச்செயலாளர் சசிகலா ஆணைப்படி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்