சித்தராமையாவின் ஊழல் ஆட்சி அகற்றப்படும் கர்நாடகத்தில் தேர்தல் யுத்தம் தொடங்கியுள்ளது எடியூரப்பா பேச்சு

சித்தராமையாவின் ஊழல் ஆட்சி அகற்றப்படும் என்றும், கர்நாடகத்தல் தேர்தல் யுத்தம் தொடங்கியுள்ளது என்றும் எடியூரப்பா கூறினார்.

Update: 2017-11-02 21:00 GMT

பெங்களூரு,

சித்தராமையாவின் ஊழல் ஆட்சி அகற்றப்படும் என்றும், கர்நாடகத்தல் தேர்தல் யுத்தம் தொடங்கியுள்ளது என்றும் எடியூரப்பா கூறினார்.

150 தொகுதிகளில் வெற்றி

கர்நாடக பா.ஜனதா சார்பில் மாற்றத்திற்கான பயண தொடக்க பொதுக்கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா பேசியதாவது:–

புதிய கர்நாடகத்தை உருவாக்குவதற்காக மாற்றத்திற்கான பயணத்தை இன்று(நேற்று) நான் தொடங்குகிறேன். கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் இந்த பயணத்தின் நோக்கம். இதற்காக மக்களிடம் செல்கிறோம். 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதற்காக தொண்டர்களாக நீங்கள் தீவிரமாக உழைக்க வேண்டும்.

தொண்டர்களை தடுத்துள்ளார்

இந்த பயணத்தின்போது கர்நாடக காங்கிரஸ் அரசின் ஊழலை மக்களுக்கு தெரியப்படுத்துவேன். மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் கர்நாடகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்றுவேன். போக்குவரத்து போலீசாரின் கெடுபிடியால் இந்த கூட்டத்திற்கு நமது தொண்டர்கள் வந்து சேர முடியவில்லை. சித்தராமையா திட்டமிட்டு பா.ஜனதா தொண்டர்களை தடுத்துள்ளார்.

இதை கண்டு நாங்கள் பயப்படவில்லை. விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும், அனைத்து கிராமங்களுக்கும் தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் மோடி தீவிரமாக பணியாற்றி வருகிறார். அனைவருக்கும் சமபங்கு, சமூகநீதியை நிலைநாட்டுவதை நாங்கள் உறுதி செய்வோம்.

இது தேர்தல் யுத்தம்

யுத்தம் தொடங்கியுள்ளது. இது தேர்தல் யுத்தம். இதற்கு நீங்கள் தயாராக வேண்டும். இதன் மூலம் சித்தராமையாவின் ஊழல் ஆட்சி அகற்றப்படும். ஒவ்வொரு பூத்திலும் நமது கட்சிக்கு குறைந்தது அதிக வாக்குகள் விழ வேண்டும். இதை கவனத்தில் வைத்து நமது நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும். ராணுவ வீரர்கள் நமது நாட்டு எல்லைகளை காப்பது போல் கர்நாடகத்தின் நலனை காக்க நீங்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.

சித்தராமையாவின் மக்கள் விரோத ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். நான் முதல்–மந்திரியாக இருந்தபோது விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனை வழங்கும் திட்டத்தை தொடங்கினேன். சுவர்ண கிராமம், பெண் குழந்தைகளின் நலனுக்காக பாக்கியலட்சுமி திட்டங்களை அமல்படுத்தினேன். ஆனால் அந்த திட்டங்களின் முக்கியத்துவத்தை சித்தராமையா குறைத்துவிட்டார். ஊழலில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. இதை சித்தராமையா தனது செயல்பாடுகள் மூலம் நிரூபித்துள்ளார்.

பா.ஜனதாவுக்கு மக்கள் பலம்

கடந்த 4 ஆண்டுகளில் கர்நாடகத்தில் 6,521 கொலைகள் நடந்துள்ளது. இதில் பெண்களின் எண்ணிக்கை 2,534 ஆகும். 3,107 கற்பழிப்பு சம்பவங்கள், 1 லட்சத்து 24 ஆயிரத்து 655 கிரிமினல் வழக்குகள் உடைய சம்பவங்கள் நடந்துள்ளன. மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.

மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்த பிறகும் அவரை மந்திரிசபையில் இருந்து சித்தராமையா நீக்கவில்லை. பா.ஜனதாவுக்கு மக்கள் பலம், கடவுள் பலம் உள்ளது. அதனால் சட்டசபை தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

மேலும் செய்திகள்