10–ந் தேதி திப்பு ஜெயந்தி விழா: போலீஸ் அதிகாரிகளுடன் சித்தராமையா தீவிர ஆலோசனை
10–ந் தேதி திப்பு ஜெயந்தி விழா பெறுவதையொட்டி போலீஸ் அதிகாரிகளுடன் சித்தராமையா தீவிர ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு,
10–ந் தேதி திப்பு ஜெயந்தி விழா பெறுவதையொட்டி போலீஸ் அதிகாரிகளுடன் சித்தராமையா தீவிர ஆலோசனை நடத்தினார். சட்டத்தை கையில் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்கர்நாடக போலீஸ் அதிகாரிகளின் கூட்டம் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி, போலீஸ் மந்திரியின் ஆலோசகர் கெம்பையா, மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூ, போலீஸ் துறை முதன்மை செயலாளர் சுபாஷ்சந்திரா, முதல்–மந்திரியின் முதன்மை செயலாளர் எல்.கே.அதீக், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–
அரசு சார்பில் வருகிற 10–ந் தேதி நடைபெறும் திப்பு ஜெயந்தி விழா குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தினேன். மத நல்லிணக்கத்தை குலைக்க பா.ஜனதாவினர் அடிக்கடி முயற்சி செய்கிறார்கள். அதனால் திப்பு ஜெயந்தியையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சில அறிவுரைகளை போலீசாருக்கு வழங்கினேன். மக்கள் திப்பு ஜெயந்தி கொண்டாடுவதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
எதிராக செயல்படவில்லைதிப்பு சுல்தான் ஒரு தேசபக்தர். அவர் இந்து மக்களுக்கு எதிராக செயல்படவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் சிருங்கேரி, நஞ்சன்கூடு கோவில்களுக்கு அவர் உதவி செய்திருக்க மாட்டார். கர்நாடகத்தில் பட்டு மற்றும் விவசாய வளர்ச்சிக்கு திப்பு சுல்தான் தான் காரணம். அவர் உண்மையான சுதந்திர போராட்ட வீரர். எடியூரப்பா கர்நாடக ஜனதா கட்சியை நடத்தியபோது அவர் திப்பு சுல்தான் பற்றி என்ன சொன்னார்?.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சட்டசபையில் பேசும்போது திப்பு சுல்தானை பாராட்டி பேசினார். ஜனாதிபதி பேசிய பிறகு தான் பா.ஜனதாவினருக்கு ஞானோதயம் பிறந்துள்ளது. இதனால் அவர்கள் திப்பு ஜெயந்தி பற்றி விமர்சிப்பதை கைவிட்டு அமைதியாகியுள்ளனர்.
சட்டத்தை கையில் எடுப்பவர்கள்கர்நாடகத்தில் சட்டம்–ஒழுங்கு சீராக உள்ளது. திப்பு ஜெயந்தி கொண்டாட்டம் மற்றும் பா.ஜனதாவின் மாற்றத்திற்கான பயணம் கூட்டத்தின்போது சட்டத்தை கையில் எடுப்பவர்கள், அமைதியை குலைக்க முயற்சி செய்பவர்கள் மற்றும் கலவரத்தை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். வரலாற்றை உருவாக்கியவர்களின் சேவைகளை நினைவுகூறும் மனப்பான்மை பா.ஜனதாவினருக்கு இல்லை.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.