கழிவுநீர் தேங்குவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

குடியாத்தத்தில் கழிவுநீர் தேங்குவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-11-02 23:00 GMT

குடியாத்தம்,

குடியாத்தம் சித்தூர் கேட்டில் இருந்து சித்தூர் செல்லும் சாலையில் ஒரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததாதல் கழிவுநீர் வீடுகள் மற்றும் கடைகள் பகுதியில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், தாசில்தார் அலுவலகத்திலும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டோர் நேற்று சித்தூர் கேட் சந்திப்பு பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தாசில்தார் நாகம்மாள், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சங்கர், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி, டவுன் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், கழிவுநீர் தேங்கி நிற்கும் இடத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்