கடலூர் மாவட்டத்தில் சராசரியாக 10.71 மி.மீ. மழை பதிவு 7 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

கடலூர் மாவட்டத்தில் சராசரியாக 10.71 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனால் சிதம்பரம் பகுதியில் 7 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2017-11-02 23:15 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த 30-ந்தேதி கடலோர தாலுகாக்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. அதன் பிறகு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடலூரில் நேற்று காலையில் வானம் மப்பும், மந்தாரமுமாக இருந்தது, அவ்வப்போது மழை விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. மாலையில் பலத்த மழை பெய்தது.

இதனால் மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவ-மாணவிகள் நனைந்த படியே சென்றனர். இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழை கோட்டு அணிந்து சென்றதை பார்க்க முடிந்தது. வாகனங்கள், சாலையில் தேங்கியிருந்த மழைநீரை வாரி இறைத்தபடி சென்றன. கடலூர் பீச்ரோட்டில் ஒரு மரம் சரிந்து சாலையில் விழுந்தது. அந்த மரத்தை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினார்கள்.

மழையின் காரணமாக நடைபாதைக்கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது, ஆனால் பாரதிசாலையில் மழைகோட்டு, குடைகள் வியாபாரம் ஜோராக நடந்தது. மக்கள் தங்களுக்குப் பிடித்த மழை கோட்டுகளை வாங்கிச்சென்றதை காண முடிந்தது. மழையினால் கடலூர் ஆனைக்குப்பம் சாலை, நேருநகர் சாலை, இம்பீரியல் சாலை, நேருஜி சாலை என நகரில் முக்கியமான சாலைகளெல்லாம் சேதமடைந்து உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. காலையில் விட்டு, விட்டு மழை பெய்தது. இரவு 7 மணிக்கு மேல் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

சிதம்பரம் அருகே கத்திரிமேடு, அத்திப்பட்டு, நந்திமங்கலம், நலம்புத்தூர், கருப்பூர், தீர்த்தக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும், காட்டுமன்னார்கோவில், திருநாரையூர், எடையூர், கீழபருத்திக்காடு, சேத்தியாத்தோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

இது குறித்து வேளாண்மை அதிகாரி ஒருவர் கூறுகையில், சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் 7 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன என்றார். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலத்திற்கு பெயர் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை குளத்தில் தண்ணீர் குறைந்து குட்டைபோல் காணப்பட்டது. தொடர்ந்து பெய்த கனமழையால் நடராஜர் சன்னதி, அம்மன் சன்னதி வழியாக வந்த தண்ணீர், சிவகங்கை குளத்துக்கு வந்தது. இதனால் அந்த குளம் நிரம்பி வழிகிறது. இதனை பக்தர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து செல்கிறார்கள்.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் சராசரியாக 10.71 மி.மீ. மழை பெய்து உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

அண்ணாமலை நகர்-72, பரங்கிப்பேட்டை-51, சிதம்பரம்-31.50, கடலூர்-13.80, கொத்தவாச்சேரி-12, வானமாதேவி-11.60, புவனகிரி-9, வேப்பூர்-8, காட்டுமயிலூர்-5, லக்கூர்-3, மே.மாத்தூர்-2, தொழுதூர்-2, குப்பநத்தம்-1, பெலாந்துறை-1, பண்ருட்டி-1, விருத்தாசலம்-1.

மேலும் செய்திகள்