மரக்கடையில் பயங்கர தீ விபத்து 10 மணி நேர போராட்டத்துக்கு பின்பு அணைக்கப்பட்டது

நாகர்கோவிலில் மரக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. 10 மணி நேர போராட்டத்துக்கு பின்பு தீ அணைக்கப்பட்டது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– மரக்கடையில் தீ நாகர்கோவில் வைத்தியநாத

Update: 2017-11-02 23:00 GMT

நாகர்கோவில்,

நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தில் மரக்கடை ஒன்று உள்ளது. இங்கு மரப்பொருட்கள் மற்றும் மரப்பொருட்கள் செய்வதற்கான பெரிய பெரிய மரத்தடிகள் வைக்கப்பட்டு இருந்தன. மரக்கடையை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு மரக்கடையின் பின் பகுதியில் பயங்கர சத்தம் கேட்டதாக தெரிகிறது. அதன் பிறகு சிறிது நேரத்தில் கடையில் இருந்து மரப்பொருட்கள் மற்றும் மரத்தடிகளில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது.

தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதை அறிந்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்னவோ, ஏதோவென்று பதறியபடி ஓடி வந்து பார்த்தனர்.

இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அதிகாரி கல்யாணகுமார் தலைமையில் நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் அழகர்சாமி மற்றும் வீரர்கள், 2 தீயணைப்பு வாகனங்களில் அங்கு வந்தனர். மின் இணைப்புகளை துண்டித்துவிட்டு உடனே தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணி நடந்தது. ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. மளமளவென பரவிய தீ மரக்கடைக்கு மேல் போடப்பட்டு இருந்த செட்டிலும் பற்றி எரியத் தொடங்கியது. இதனால் தீயணைப்பு வீரர்களால் நெருங்க முடியவில்லை. தூரத்தில் இருந்தே தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

இதற்கிடையே தீயணைப்பு வாகனங்களில் இருந்த தண்ணீரும் தீர்ந்து விட்டது. அதைத் தொடர்ந்து நாகர்கோவில் அலுவலகத்தில் இருந்து மேலும் ஒரு தீயணைப்பு வாகனமும், குளச்சல் மற்றும் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையங்களில் இருந்து தலா ஒரு தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணி தொடங்கி 4 மணி நேரத்தை கடந்த பிறகும் தீயணைப்பு வீரர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் தீ மேலும் பரவி தங்கள் வீடுகளுக்கும் வந்துவிடுமோ என்று அருகே உள்ள குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைந்தனர். எனவே தங்களது வீடுகளில் இருந்த எளிதில் தீ பற்றும் பொருட்களை வாகனங்களில் ஏற்றி வேறு இடத்துக்கு கொண்டு சென்றனர். மேலும், குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பெண்களும் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. தீயணைப்பு வாகனங்களுக்கு தேவையான தண்ணீர் நகராட்சி லாரிகள் மூலம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.

இறுதியாக 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் மரக்கடையில் இருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான மரப்பொருட்கள் மற்றும் மரத்தடிகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் பற்றி தெரியவில்லை.

இதுதொடர்பாக கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொழில் போட்டியால் ஏற்பட்ட தகராறில் மர்ம நபர்கள் இந்த நாசவேலையில் ஈடுபட்டார்களா? அல்லது மின் கசிவு காரணமாக மரக்கடையில் தீ பற்றியதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தீ விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக தீயை அணைக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்