குளோரின் வாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு 30–க்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல், வாந்தி

அம்பை சுப்பிரமணியபுரம் பகுதியில் குளோரின் வாயு சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டதால் 30–க்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல், வாந்தி ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். குளோரின் வாயு கசிவு அம்பை சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியில் நகர

Update: 2017-11-02 20:30 GMT

அம்பை,

அம்பை சுப்பிரமணியபுரம் பகுதியில் குளோரின் வாயு சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டதால் 30–க்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல், வாந்தி ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

குளோரின் வாயு கசிவு

அம்பை சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியில் நகரசபைக்கு சொந்தமான தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. அதன் அருகில், நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வினியோகிக்கப்படும் நீரில் குளோரின் வாயு கலப்பதற்கான அறை ஒன்று உள்ளது. அங்கு குடிநீர் செல்லும் குழாயில் உள்ள வால்வில், குளோரின் வாயு சிலிண்டர் இணைக்கப்பட்டு அதன்மூலம் நீரில் குளோரின் கலக்கப்படும். வழக்கம்போல் குளோரின் வாயு சிலிண்டர் ஒன்று வால்வில் இணைக்கப்பட்டு இருந்தது. மாற்று சிலிண்டர் ஒன்று அறைக்கு வெளியே இருப்பு வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அம்பை பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் மின்தடையும் ஏற்பட்டது. இந்த நிலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த குளோரின் வாயு சிலிண்டரில் இருந்து திடீரென்று கசிவு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த நகரசபை ஊழியர்கள் மாடசாமி, சுந்தர்ராஜ் ஆகிய இருவரும் கசிவை சரிசெய்ய முயன்றனர். ஆனால் அவர்களால் சரிசெய்ய முடியவில்லை.

30–க்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல், வாந்தி

இதுகுறித்து அவர்கள் உடனடியாக நகரசபை ஊழியர் (பிட்டர்) பூமிநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் சம்பவ இடத்துக்கு வந்தார். ஆனால் அதற்குள் சிலிண்டரில் இருந்து குளோரின் வாயு அதிகளவில் வெளியேறி அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதில் நகரசபை ஊழியர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் என 30–க்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல் மற்றும் வாந்தி ஏற்பட்டது.

உடனே பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருக்க முடியாமல், மூக்கில் துணியை கட்டிக்கொண்டு வெளியே வந்தனர். குளோரின் வாயு அதிகளவில் வெளியேறியதாலும், அந்த கசிவை சரிசெய்ய முடியாததாலும் நகரசபை ஊழியர்கள் இதுகுறித்து அம்பை தீயணைப்பு துறையினருக்கும், போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். தீயணைப்பு துறையினர் ஆக்சிஜன் வாயு சிலிண்டர் உதவியுடன் சுவாசித்தபடி, குளோரின் வாயு கசிவை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆக்சிஜன் வாயு தீர்ந்தது

ஆனால் அதற்குள் அவர்கள் கொண்டு வந்த சிலிண்டரில் இருந்த ஆக்சிஜன் வாயு தீர்ந்து விட்டது. இதனால் தீயணைப்பு துறையினருக்கும் மூச்சுதிணறல் ஏற்பட்டது. குளோரின் வாயு கசிவை சரிசெய்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து குளோரின் வாயு கசியும் சிலிண்டரை வேறு இடத்துக்கு அப்புறப்படுத்த நகரசபை ஊழியர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, நகரசபைக்கு சொந்தமான ஆட்டோவில் அந்த குளோரின் வாயு சிலிண்டரை ஏற்றிக்கொண்டு, கோடாரங்குளம் செல்லும் சாலையில் உள்ள ஒரு கால்வாய்க்கு கொண்டு சென்றனர். அங்கு கால்வாய் தண்ணீரில் குளோரின் வாயு சிலிண்டரை மூழ்க செய்தனர். பின்னர் சிலிண்டரில் இருந்த குளோரின் வாயு முழுவதும் தீர்ந்தவுடன் அந்த சிலிண்டர் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டு, நகரசபை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

பரபரப்பு

இதற்கிடையே, குளோரின் வாயு கசிவு காரணமாக மூச்சு திணறல், வாந்தி ஏற்பட்ட அனைவரும் அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் நேற்று காலை வீடு திரும்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்