நெல்லையில், வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம் பாளையங்கோட்டையில் 134 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது

நெல்லை, பாளையங்கோட்டையில் ஒரே நாளில் 134 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.

Update: 2017-11-02 21:00 GMT

நெல்லை,

நெல்லை, பாளையங்கோட்டையில் ஒரே நாளில் 134 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.

பலத்த மழை

வடகிழக்கு பருவமழையையொட்டி நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை நெல்லை, பாளையங்கோட்டை பகுதியில் பலத்த மழையாக நள்ளிரவு வரை தொடர்ந்து பெய்தது. அதை தொடர்ந்து மழை லேசாக பெய்து கொண்டே இருந்தது.

நேற்று காலை 8 மணி வரை பாளையங்கோட்டை பகுதியில் 134 மில்லி மீட்டரும், நெல்லை பகுதியில் 94 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

குளமாக மாறிய பஸ் நிலையம்

இந்த பலத்த மழையால் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் குளமாக மாறி விட்டது. நெல்லை மீனாட்சிபுரம், நயினார்குளம் குளம் பாசன வயல் பகுதிகளில் இருந்து வந்த தண்ணீர் சந்திப்பு பஸ் நிலையத்தில் தேங்கியது. இதனால் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய வளாகத்தில் ஒரு பகுதி, மதுரை ரோட்டில் அம்பேத்கர் சிலையில் இருந்து, சிந்துபூந்துறை சாலைத்தெரு வரை ரோடு வெளியே தெரியாத வகையில் தண்ணீரில் மூழ்கியது.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலையில் தேங்கிய தண்ணீரை வடியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் மூலம் மழைநீர் வடிகாலை தூர்வாரி தண்ணீரை வெளியேற்றினர். ஆனாலும் பஸ் நிலைய வளாகம் மற்றும் மதுரை ரோடு தொடர்ந்து தண்ணீருக்குள் மூழ்கியே கிடந்தது.

கால்வாய் கரை உடைந்தது

இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. நேற்று பெய்த பலத்த மழையால் கால்வாயில் காட்டு ஓடைகளில் இருந்து தண்ணீர் வந்து ஓடியது. இதனால் கால்வாயில் அதன் முழு கொள்ளவையும் தாண்டி தண்ணீர் வந்தது.

தாமிரபரணி ஆற்றில் இருந்து நெல்லை கால்வாய் வழியாக கீழகுன்னத்தூரில் தொடங்கி, நெல்லை டவுன் கல்லணை வழியாக நயினார்குளத்துக்கு நயினார்குளம் கிளை கால்வாயில் கால்வாய் கரையை கடந்து தண்ணீர் வெளியேறி சென்றது. கீழகுன்னத்தூரில் தண்ணீர் பாசன மடை பகுதியில் பொங்கிச் சென்ற தண்ணீர் கால்வாய் கரையை உடைத்து ரோட்டை முழுமையாக அரித்துச் சென்று விட்டது. இதனால் பாடகசாலை குன்னத்தூர் கால்வாய் கரை ரோட்டில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இருந்த போதிலும் அங்குள்ள கான்கிரீட் தடுப்பு சுவரால் வெள்ளம் ஊருக்குள் செல்வது தடுக்கப்பட்டு உள்ளது. அந்த சுவரும் ஆடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அங்கு மேலும் உடைப்பு ஏற்படுவதை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, பாதுகாப்பு கருதி கால்வாய் தண்ணீர் திறப்பையும் குறைக்கவில்லை என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அதிக மழை பெய்யும் நேரத்தில் ஊர் மக்களின் பாதுகாப்பு கருதி கால்வாயில் தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

இந்த கால்வாயில் வந்த கூடுதல் தண்ணீரால் டவுன் வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது இதே கால்வாயில் மேலும் பல இடங்களில் கால்வாயில் அதிகளவு சென்ற வெள்ள நீர், கால்வாய் கரையில் உள்ள ரோட்டை கடந்து சென்ற பள்ளத்தை நோக்கி பாய்ந்து பெருக்கெடுத்து ஓடியது. சொக்கட்டான் தோப்பு, மகிழ்வண்ணநாதபுரம் பகுதியில் கால்வாய் கரையை கடந்து வெளியேறிய வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதனால் மகிழ்வண்ணநாதபுரம் பகுதி தெருக்கள், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் அங்கிருந்து வந்த தண்ணீர் நெல்லை டவுன் ரெயில் நிலையம் அருகில் உள்ள பாப்பா தெருவை மூழ்கடித்து, வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு, விடிய, விடிய பொது மக்கள் தூங்க முடியாமல் வீடுகளுக்குள் அச்சத்துடன் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை பொது மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் 2 பொக்லைன் எந்திரங்களுடன் பாப்பா தெரு, மகிழ்வண்ணநாதபுரம் பகுதிகளுக்கு விரைந்து சென்றனர். அங்குள்ள சிறிய ஓடைகள் மற்றும் பாலங்களில் தண்ணீர் எளிதாக கடந்து செல்லும் வகையில் தோண்டி அகலப்படுத்தினர். இதனால் தண்ணீர் மெல்ல, மெல்ல வடியத்தொடங்கியது.

மரம் சாய்ந்தது

நெல்லை டவுன் பாட்டபத்து பகுதியில் கால்வாய் கரையில் இருந்து வெள்ளம் பொங்கி கரையை விட்டு வெளியேறியது. இதனால் அங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்தது.

மேலும் பாளையங்கோட்டையில் பெய்த பலத்த மழையால் பெருமாள்புரத்தில் தனியார் ஆஸ்பத்திரி முன்பு மரம் சாய்ந்து விழுந்தது. தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். இதே போல் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. பலத்த மழை காரணமாக நெல்லையில் தொலை தொடர்பு இணைப்புகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.

கலெக்டர் ஆய்வு

மழை வெள்ள பாதிப்புகளை நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டார். பேட்டை நரிக்குறவர் காலனி, டவுன் மகிழ்வண்ணநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

உடனுக்குடன் மீட்பு பணிகளை செய்யவும், மழை நீர் வடிந்தோட உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:–

பாளையங்கோட்டை –134, நெல்லை –94, நம்பியாறு –82, சேரன்மாதேவி –67, ராதாபுரம் –45, மணிமுத்தாறு 42, அம்பை –38, கருப்பாநதி –35, நாங்குநேரி –29, பாபநாசம் –26, சங்கரன்கோவில், –16, சிவகிரி –10, சேர்வலாறு –10, கொடுமுடியாறு –7, ஆய்குடி –5, தென்காசி –5, ராமநதி –5, அடவிநயினார் –4, கடனா –3, செங்கோட்டை –3, குண்டாறு –1.

மேலும் செய்திகள்