மழை காலத்தில் உயிர் சேதத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காலங்களில் உயிர் சேதத்தை தவிர்க்க, பொதுமக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Update: 2017-11-02 21:00 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காலங்களில் உயிர் சேதத்தை தவிர்க்க, பொதுமக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

இடி–மின்னல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின் போது இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இடி மின்னலினால் ஒவ்வொரு ஆண்டும் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இடி, மின்னல் ஏற்படும் முன்பு, எப்போதும் அவசரகால கருவிகள் மற்றும் குடும்ப நபர்களின் போன் நம்பர் பற்றிய விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பட்டுப்போன மரங்கள் மற்றும் மரக்கிளைகளை உடனடியாக அகற்றிட வேண்டும். மின்னலை கண்ட 30 வினாடிகளுக்குள் இடி சத்தம் கேட்டால், உடனடியாக கட்டிடங்களுக்கு உள்ளே செல்ல வேண்டும்.

வெளியில் இருந்து பறந்து வந்தோ, அல்லது தாக்கியோ சேதத்தை விளைவிக்கும் பொருட்களை கண்டறிந்து அதிலிருந்து விலகி பாதுகாப்பாக இருக்க வேண்டும். இடி மின்னலைக் கண்டவுடன் வீடு, கட்டிடம் மற்றும் உறுதியான வாகனங்களுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ரப்பர் காலணிகள் மற்றும் ரப்பர் உபகரணங்கள் மின்னலிருந்து எவ்வித பாதுகாப்பும் அளிப்பதில்லை. வீடுகள், கட்டிடங்களின் சன்னல் மற்றும் கதவுகளை அடைத்தும், சன்னல் கதவு இல்லாத பட்சத்தில் சன்னல்களை திரைச்சீலையைக் கொண்டோ மறைக்க வேண்டும். மின் சாதனங்களை மின் இணைப்புகளிலிருந்து அகற்றிட வேண்டும்.

இரும்பு குழாய்கள்

இடி மின்னலின் போது ரேடியோ உபகரணங்கள் மூலம் வானிலை தொடர்பான செய்தி கேட்க வேண்டும். மின் இணைப்பில் பொருத்தப்பட்டுள்ள போன்களை தொடக்கூடாது.

மின்சாதனங்களை தொடக்கூடாது. கம்ப்யூட்டர் போன்ற மின்சாதனங்களை மின் இணைப்பிலிருந்து கழற்றி வைக்க வேண்டும். இரும்பிலான குழாய்களில் வரும் தண்ணீரை தொடவோ, பாத்திரங்களை கழுவுவதோ கூடாது. மைதானங்கள், கடற்கரை மற்றும் தண்ணீரில் உள்ள படகுகில் இருக்க கூடாது. உறுதியான கட்டிடங்களில் இருக்க வேண்டும். மைதானத்தில் தனியாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள், சிறிய கட்டிடங்கள் ஆகிய இடங்களில் தங்க கூடாது. இரும்பிலான உழவு கருவிகள், மோட்டார் சைக்கிள், சைக்கிள் ஆகியவைகளை தொடக் கூடாது.

இடி–மின்னல் தாக்கினால்....

இடி, மின்னலால் பாதிக்கப்பட்டவருக்கு இதய துடிப்பு மற்றும் சுவாசம் இருந்தால், வேறு ஏதாவது காயம் உள்ளதா என பார்க்க வேண்டும். நரம்பு மண்டலம், எலும்பு முறிவு, கண் பார்வை மற்றும் காது கேட்கும் குறைபாடு உள்ளதா என பார்க்க வேண்டும். பின், உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.

இடி மற்றும் மின்னல் நின்ற உடன் வெள்ள நீரிலான சாலையில் செல்லாமல் சுற்றி செல்ல வேண்டும். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்ல கூடாது. வானிலை தொடர்பான அறிக்கைகளை தொலைகாட்சி மற்றும் ரேடியோ மூலம் கேட்க வேண்டும். அதன்படி வெள்ளத்தினால் பாதிக்கப்படாத சாலைகள் மற்றும் பகுதிகளுக்கு செல்ல வேண்டும். மிகவும் உதவி தேவைப்படும் நபர்கள் கைகுழந்தைகள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

அறுந்து விழுந்துள்ள மின்கம்பிகளில் இருந்து விலகி நிற்க வேண்டும். இது தொடர்பான தகவல்களை அவசர செயலாக்க மைய தொலைபேசி எண் 1077–க்கு தெரிவிக்க வேண்டும்.

புயல், வெள்ளம் முதலிய இயற்கை இடர்பாடுகள் தொடர்பான தகவல்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அவசர செயலாக்க மைய தொலைபேசி எண் 1077–க்கு தெரிவிக்கலாம். மேலும் 9486454714 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்