ஆவடியில் டெங்கு காய்ச்சலால் 8 வயது சிறுமி பலி
ஆவடியில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக இறந்தார். அவளுடைய தந்தையும் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆவடி,
ஆவடி பக்தவத்சலபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் ஜென்சி பிரியா (வயது 8). இவள், ஆவடியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தாள்.
கடந்த ஒரு வாரமாக சிறுமி ஜென்சி பிரியா, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தாள். இதற்காக அவளது பெற்றோர், அவளை ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று காண்பித்தனர். அங்கு டாக்டர்கள் சிறுமியை சரியாக பரிசோதிக்காமல் சாதாரண காய்ச்சல் என்று கூறி மாத்திரைகள் கொடுத்து அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் காய்ச்சல் குணமாகாததால் சிறுமியை திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, சிறுமி ஜென்சி பிரியாவுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் இரவு சிறுமி ஜென்சி பிரியா பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதையடுத்து நேற்று காலை ஆவடி நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பூந்தமல்லியில் இருந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதியை பார்வையிட வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
அங்கிருந்து அவர்களை திரும்பி போகும்படி கூறினர். இதனால் வேறு வழி இன்றி அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டனர். ஆவடி நகராட்சி முன்னாள் தலைவர் சா.மு.நாசர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலியான சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையில் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சிறுமி ஜென்சி பிரியாவின் தந்தை பாலாஜியும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒரே வீட்டில் டெங்கு காய்ச்சலால் தந்தை–மகள் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தங்கள் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.