திருத்துறைப்பூண்டி அருகே போலீஸ் ஏட்டு மர்மசாவு பல்வேறு கோணங்களில் விசாரணை

திருத்துறைப்பூண்டி அருகே போலீஸ் ஏட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update: 2017-11-01 23:00 GMT
திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பழையங்குடி சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் ஜீவானந்தம் (வயது 32). இவர் எடையூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், அபிமன்ருத்ரா (1) என்ற மகனும் உள்ளனர். அனிதா வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் ஜீவானந்தம் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். இந்தநிலையில் நேற்று காலை குளியறையில் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் ஜீவானந்தம் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி, ஆலிவலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, இறந்த ஜீவானந்தத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜீவானந்தம் எப்படி இறந்தார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்