வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களுக்கு 4 நாள் சம்பளம் மட்டுமே பிடித்தம் செய்யப்படும்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களுக்கு 4 நாள் சம்பளம் மட்டுமே பிடித்தம் செய்யப்படும் என மந்திரி திவாகர் ராவ்தே விளக்கம் அளித்தார்.
மும்பை,
மராட்டிய மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 7–வது ஊதிய குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்கவேண்டும் என வலியுறுத்தி தீபாவளி பண்டிகையின் போது 4 நாட்கள் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தீபாவளி சமயத்தில் நடந்த இந்த போராட்டத்தால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர். ஐகோர்ட்டு உத்தரவிற்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.இந்தநிலையில் 4 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு 36 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்ற தகவல் பரவியது. இதனால், போக்குவரத்து ஊழியர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
இந்தநிலையில் இது குறித்து மாநில போக்குவரத்து துறை மந்திரி திவாகர் ராவ்தே கூறுகையில், ‘4 நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு 4 நாள் சம்பளம் மட்டுமே பிடித்தம் செய்யப்படும்’ என்றார்.மேலும், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ‘இ.எல்.’ விடுப்பில் இருந்தும் 8 நாட்கள் கழிக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறினார்.