தொடர் மழையால் பாகூர் பகுதியில் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது
தொடர் மழையால் பாகூர் பகுதியில் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது.
பாகூர்,
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து புதுவை மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானியை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று புதுவை நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளான பாகூர், திருக்கனூர், திருபுவனை, கிருமாம்பாக்கம், தவளக்குப்பம், அரியாங்குப்பம் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.
இந்த மழை காரணமாக வடிகால் வாய்க்கால்களில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள அடைப்பால் விவசாய நிலங்களில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேறவில்லை. தாழ்வான குடியிருப்பு பகுதியிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பாகூர், கரையாம்புத்தூர், சோரியாங்குப்பம், குருவிநத்தம், இருளன்சந்தை, பனையடிக்குப்பம், கடுவனூர், சேலியமேடு, குடியிருப்பு பாளையம், கரிக்கலாம்பாக்கம் மற்றும் சுற்றுப்பகுதியில் பயிர் செய்யப்பட்டுள்ள 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. மேலும் சில நாட்கள் வயலில் தண்ணீர் தேங்கியிருந்தால் நெற்பயிர்கள் அழுகி வீணாகும் நிலை உள்ளது.
தொடர் மழையால் கொமந்தான்மேடு, சித்தேரி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இரு தடுப்பணைளும் நிரம்பி வழிகிறது. மேலும் மழை தொடர்ந்தால் அணைக்கட்டு பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே வருவாய்த்துறை, கொம்யூன் பஞ்சாயத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். கடலூர்– புதுச்சேரி சாலையில் தேங்கியுள்ள மழைநீரை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பள்ளம் தோண்டி வடியவைத்து வருகின்றனர்.
பாகூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தனவேலு எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். அப்போது மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றவும், தாழ்வான பகுதியில் மழைநீர் புகுந்துவிடாமல் இருக்க மண் கொட்டி சீரமைக்கவும் அறிவுறுத்தினார். மழைநீர் கசிவு ஏற்பட்ட குடிசை வீடுகளுக்கு, மழைநீர் வடியாமல் இருக்க தார்பாய்களை தனவேலு எம்.எல்.ஏ. வழங்கினார்.
தொடர் மழை காரணமாக சுண்ணாம்பாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நோணாங்குப்பம் தடுப்பணை ஓராண்டுக்கு பிறகு தண்ணீர் நிரம்பி வழிகிறது. நோணாங்குப்பம் படகு குழாமில் நேற்று நீர்மட்டம் உயர்ந்ததால் பாரடைஸ் பீச்சுக்கு படகுகள் இயக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.