3 ரவுடிகள் படுகொலை வழக்கு: கோர்ட்டில் சரண் அடைந்த மேலும் 2 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை
3 ரவுடிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த மேலும் 2 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி,
புதுவை முத்திரையர்பாளையத்தை சேர்ந்த ஞானசேகர் என்ற நாய் சேகர் (வயது25), காந்திதிருநல்லூரை சேர்ந்த சதீஷ் (21), சண்முகாபுரத்தை சேர்ந்த ஜெரால்டு (22) ஆகிய 3 ரவுடிகள் தீபாவளி தினமான கடந்த 18–ந் தேதி நள்ளிரவில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர்.
இந்த படுகொலைகள் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகாபுரத்தை சேர்ந்த நந்தகுமார், சாணரப்பேட்டையை சேர்ந்த சூர்யா என்ற சங்கர் கணேஷ், புதுப்பேட்டையை சேர்ந்த சின்னதுரை, முத்திரையர்பாளையம் சுதாகர் (25), லாஸ்பேட்டையை சேர்ந்த வினோத் (21) என்ற கலையரசன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
மேலும் முக்கிய குற்றவாளிகளான பிரபல தாதா தமிழரசன் (28), வேலுமணி (31), அந்தோணிராஜ் (31) ஆகிய 3 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் கோர்ட்டில் சரணடைந்தனர். அரியாங்குப்பம் பாஸ்கர், கிருஷ்ணா ஆகிய 2 பேரும் நேற்று மதியம் விழுப்புரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் புதுவை கொண்டு வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் போலீசார் கோர்ட்டு அனுமதி பெற்று தமிழரசன், வேலுமணி, அந்தோணிராஜ் ஆகிய 3 பேரையும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று கோர்ட்டில் சரண் அடைந்த பாஸ்கர், கிருஷ்ணா ஆகிய 2 பேரையும் காவலில் வைத்து விசாரணை நடத்த போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் 2 பேரையும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து பாஸ்கர், கிருஷ்ணா ஆகிய 2 பேரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.