சத்தி அருகே பேராசிரியையின் கணவர் கொலை: குற்றவாளிகளை கைது செய்ய 2 தனிப்படை அமைப்பு
சத்தியமங்கலம் அருகே நடந்த பேராசிரியையின் கணவரை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் அருகே உள்ள கொமரபாளையம் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருபவர் விஸ்வநாதன் (வயது 33). டிரைவர். இவருடைய மனைவி ஏஞ்சலின் (30). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை செய்து வருகிறார். 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அர்னிதா (6) என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் ஒன்றில் 1–ம் வகுப்பு படித்து வருகிறாள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சத்தியமங்கலத்தை அடுத்த சபரி காலனி அருகே கே.என்.பாளையம் ரோட்டில் தலையில் பலத்த காயத்துடன் விஸ்வநாதன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்கள்.
இந்தநிலையில் விஸ்வநாதனை கொன்றவர்களை கைது செய்ய சத்தி துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையில் ஒரு தனிப்படையும், பங்களாபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
கொலை நடந்த இடம் அருகே மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தண்ணீர் பாக்கெட் ஆகியவை கிடந்தன.