முதல்–அமைச்சரிடம் இருந்து நல்ல திட்டங்களை கேட்டு பெற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஓர் வாய்ப்பு திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

திண்டுக்கல்லில் மருத்துவக்கல்லூரி, புதிய பஸ் நிலையம் அமைப்பது போன்ற நல்ல திட்டங்களை முதல்–அமைச்சரிடம் இருந்து கேட்டு பெற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஓர் சிறந்த வாய்ப்பு என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

Update: 2017-11-01 22:30 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

இதற்கு மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய், போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:–

தமிழகம் முழுவதும் 21 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் வருகிற டிசம்பர் மாதம் 9–ந்தேதி அந்த விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்க இருக்கிறார்.

இந்த விழாவில், துணை முதல்–அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளனர். இந்த விழாவை சிறப்பாக நடத்தி முடிக்க அனைத்து துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

மேலும், திண்டுக்கல்லுக்கு தேவையான மருத்துவக்கல்லூரி, புதிய பஸ் நிலையம் போன்ற நல்ல திட்டங்களை முதல்–அமைச்சரிடம் கேட்டு பெற இது ஒரு நல்ல வாய்ப்பு. அதற்கு முன்பு அவற்றை அமைக்க தேவையான இடங்களை கண்டறிய வேண்டும். அதை முதல்–அமைச்சரிடம் கூறி, புது திட்டங்களை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, ஒவ்வொரு துறை வாரியாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து கேட்டறிந்த கலெக்டர், தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் அவர் விவரித்தார்.

இந்த கூட்டத்தில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, பழனி சப்–கலெக்டர் அருண்ராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அருண்சத்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, திண்டுக்கல் முன்னாள் மாநகராட்சி மேயர் மருதராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்