வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு ஓ.பன்னீர்செல்வம் மதகுகளை திறந்துவைத்தார்
பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீரை திறந்துவைத்தார்.;
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப்போனதால் அணையின் நீர்மட்டம் உயரவில்லை. இதனால் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த சில வாரங்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது.
மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும் வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 55 அடியை எட்டியது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து திண்டுக்கல், மதுரை மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பாசனத்துக்காக தண்ணீர் திறக்க முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி வைகை அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொத்தானை அழுத்தி மதகுகளை திறந்துவைத்தார்.
வைகை அணையின் சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவினர்.
தண்ணீர் இருப்பை பொறுத்து, வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு வினாடிக்கு 900 கனஅடி வீதம் மொத்தம் 6,739 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி, வைகை அணையின் நீர்மட்டம் 55.64 அடியாக (மொத்த உயரம் 71 அடி) இருந்தது. அணைக்கு வினாடிக்கு 704 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையின் நீர்இருப்பு 2,823 மில்லியன் கனஅடியாக இருந்தது.