‘மக்களின் தேவைகளை நிறைவேற்றி தருவது அ.தி.மு.க. அரசு மட்டும் தான்’ - எடப்பாடி பழனிசாமி
‘மக்களின் தேவைகளை நிறைவேற்றி தருவது அ.தி.மு.க. அரசு மட்டும் தான்’ என்று கோவையில் நடந்த விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.;
கோவை,
கோவை காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக தமிழக அரசின் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் ரூ.195 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதில் முதல் அடுக்கு மேம்பாலத்தின் திறப்பு விழா காந்திபுரத்தில் நேற்றுமாலை நடைபெற்றது.
சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலை வகித்தார். புதிய மேம்பாலத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தும், கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டி வைத்தும் பேசியதாவது:–
கோவை மாவட்டத்துக்கு என்னென்ன தேவையோ அவற்றை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். இந்த பாலத்தில் நெரிசலை போக்குவதற்காக ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டார். அந்த கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டு ரவுண்டானா அமைக்கப்படும். முந்தைய தி.மு.க. ஆட்சியில் திட்டங்கள் சரியாக திட்டமிடாமல் கொண்டு வரப்பட்டன. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் திட்டங்கள் சரியாக திட்டமிடப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
கோவையில் உப்பிலிபாளையம் முதல் விமான நிலையம் வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.900 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதுதவிர மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு மக்களின் அரசு. மக்களுக்கான அரசு. மக்களின் தேவைகள் என்னவோ அதை நிறைவேற்றி தருவது அ.தி.மு.க. அரசு மட்டும் தான். கோவை மாவட்டத்தில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு கோவை தன்னிறைவு பெற்ற மாவட்டமாக திகழும்.
இவ்வாறு அவர் பேசினார்.