உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சுத்தம், சுகாதராம் இல்லையென்றால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2017-11-01 22:45 GMT

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அரசு மாவட்ட ஆஸ்பத்திரியில் நேற்று காலை கலெக்டர் வீரராகவராவ் திடீர் ஆய்வு செய்தார். அப்போது வார்டுகளில் உள்ள நோயாளிகளை சந்தித்து சிகிச்சை முறையாக அளிக்கப்படுகிறதா என்று கலெக்டர் கேட்டர். பின்னர் ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறை மற்றும் வளாகத்தை பார்வையிட்டார். அப்போது கழிவறை சுத்தமில்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த கலெக்டர் டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் ஏன் இப்படி சுத்தமில்லாமல் வைத்துள்ளீர்கள் எனக் கேட்டார்.

இதுபோன்ற நிலை தொடர்ந்து நீடித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும் கழிவறையில் தண்ணீர் வசதி இல்லாதது தெரியவந்ததும், ஆஸ்பத்திரிக்கு தேவையான தண்ணீர் வசதியை தடையின்றி உரியநேரத்தில் நகராட்சி நிர்வாகம் வழங்கவேண்டுமென்று உத்தரவிட்டார்.

ஆஸ்பத்திரிக்கு தேவையான தண்ணீரை வழங்கவில்லை என்றால் நகராட்சி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இந்த ஆய்வின் போது மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாலமுரளி, ஆர்.டி.ஓ. சுகன்யா, யூனியன் ஆணையாளர் பரமசிவம், யூனியன் பொறியாளர் கண்ணன், நகராட்சி ஆணையாளர் சுப்பையா, போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் உள்பட ஆஸ்பத்திரி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்