உடன்குடியில், வியாபாரிகள் கடையடைப்பு மழைநீர் வடிவதற்கு வாறுகால் அமைக்க கோரிக்கை

உடன்குடியில் மழைநீர் வடிவதற்கு வாறுகால் அமைக்க வலியுறுத்தி, வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-01 21:00 GMT

உடன்குடி,

உடன்குடியில் மழைநீர் வடிவதற்கு வாறுகால் அமைக்க வலியுறுத்தி, வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையில் தேங்கிய மழைநீர்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் இரவில் மழை பெய்தது. உடன்குடி பகுதிகளிலும் இரவு முழுவதும் பரவலான மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் உடன்குடி மெயின் பஜார், தெற்கு பஜார், சத்தியமூர்த்தி பஜார், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழைநீர் குளம் போன்று தேங்கியது.

உடன்குடி நகர பகுதிகளில் சாலையோரம் வாறுகால் அமைக்கப்படவில்லை. இதனால் உடன்குடி பஜார் பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற முடியவில்லை. மேலும் மழைநீர் தேங்குவதால் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளது. எனவே உடன்குடியில் மழைநீர் வடிவதற்கு வசதியாக சாலையின் இருபுறமும் வாறுகால் அமைக்க வேண்டும். பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடையடைப்பு

உடன்குடி பஸ் நிலையம், பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் திறக்கப்படவில்லை. டீக்கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டதால், நகரம் முழுவதும் வெறிச்சோடியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

இதற்கிடையே சாலையில் தேங்கி கிடந்த தண்ணீரில் மணலை நிரப்பி சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர் மாலையில் கடைகள் திறக்கப்பட்டன.

மேலும் செய்திகள்