பெரம்பலூரில் துணிகரம்: கடைகளின் பூட்டை உடைத்து கணினி- ரூ.45 ஆயிரம் திருட்டு

பெரம்பலூரில் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.45 ஆயிரம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-10-31 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மதுராதேவி என்பவர் ஜெராக்ஸ் கடையுடன் சேர்ந்தவாறு டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர், நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு தனது வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று அதிகாலை மீண்டும் கடையை திறக்க வந்த போது கடையின் ஷட்டரின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த மதுராதேவி கடையினுள் சென்று பார்த்த போது ஆங்காங்கே பொருட்கள் சிதறி கிடந்தன. கடையினுள் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் மற்றும் கணினி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதே போல் அருகிலுள்ள பேக்கரி கடையின் பூட்டையும் உடைத்து அங்கிருந்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர். மேலும் அருகில் உள்ள இணையதளம் வாயிலாக சான்றிதழுக்கு விண்ணப்பித்து கொடுக்கும் தனியார் பொது சேவை மையத்தின் ஒரு பூட்டு மட்டும் உடைக்கப்பட்டிருந்தது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் விரல்ரேகை நிபுணர்களும் வர வழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் கடை, ஓட்டல் நடத்தி வரு பவர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். 

மேலும் செய்திகள்