நகைகள் ஏலம் விடப்பட்டதை கண்டித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டம்

நகைகள் ஏலம் விடப்பட்டதை கண்டித்து சந்தையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-10-31 23:00 GMT
தரகம்பட்டி,

கடவூர் வட்டத்தில் உள்ள கொசூர், மத்தகிரி, தொண்டமாங்கிணம் ஆகிய 3 ஊராட்சிகளை மையமாக கொண்டு சந்தையூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இதில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்த வங்கியின் பொறுப்பு செயலாளராக இளஞ்சியம் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் 243 பயனாளிகள் நகைகள் அடகு வைத்திருப்பதால் அவர்களுக்கு ஏல நோட்டீசு விடப்பட்டது. ஆனால் இதில் 110 பேர் பணம் கட்டி மறு அடகு வைத்துவிட்டனர். மீதமுள்ள 133 பேரின் நகைகள் கடந்த அக்டோபர் 27 மற்றும் 30-ந் தேதி ஏலம் விடப்பட்டது.

இதனை கண்டித்து கொசூர், மத்தகிரி, தொண்டமாங்கிணம் ஆகிய 3 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று சந்தையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கூட்டுறவு துணை பதிவாளர் திருநீலகண்டன், கூட்டுறவு சார்பதிவாளர் ரவிக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், இதுகுறித்து முறையாக விசாரணை செய்து தவறு நடந்திருந்தால் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவசாய கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்