போலீஸ் வேன் உள்பட அடுத்தடுத்து 5 வாகனங்கள் விபத்தில் சிக்கின 3 பேர் படுகாயம்

துவரங்குறிச்சி அருகே போலீஸ் வேன் உள்பட அடுத்தடுத்து 5 வாகனங்கள் விபத்தில் சிக்கியதில் 3 பேர் படுகாய மடைந்தனர்.

Update: 2017-10-31 23:00 GMT
மணப்பாறை,

சென்னையில் இருந்து மதுரை நோக்கி 36 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் நேற்று காலை திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அருகே சேத்துப்பட்டி பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

அப்போது மழையும் பெய்தது. இதையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்துவதற்காக பிரேக் பிடிக்கவே, பின்னால் சென்னையில் இருந்து புளியங்குடி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று பஸ் மீது மோதியது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது எதிரே திருச்சியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசு பஸ் போலீசாரின் ரோந்து வேன் மீது மோதியது.

இதற்கிடையில் சென்னையில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்ற கார் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி நின்ற அரசு பஸ் மீது மோதியது. இதில் காரில் சென்ற சென்னை வியாசர் பாடியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 33), கோபி (40), தினேஷ் (26) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து துவரங் குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான தனியார் பஸ், 2 கார்கள், போலீஸ் வேன், அரசு பஸ் ஆகிய 5 வாகனங்களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். மழை பெய்தாலே சேத்துப்பட்டி பிரிவு சாலையில் இது போன்று தொடர் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம் சேத்துப்பட்டி பிரிவு சாலையில் மழை நேரத்தில் பிரேக் பிடித்தாலும் வாகனங்கள் நிற் காமல் வழுக்கிக் கொண்டே செல்லும் வகையில் சாலை உள்ளது. ஆகவே இதனால் பெரிய அசம்பாவிதம் நிகழ வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு சாலையை சரிசெய்திட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் பலமுறை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று காலை விபத்து ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மக்கள் சாலையை தகர்த்தெறியும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இருப்பினும் தொடர்ந்து மழை பெய்ததால் போராட்டத்தில் ஈடுபடாமல், அவர்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்