மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தண்ணீர் திறப்பு 6 ஆயிரம் கனஅடியாக குறைப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 675 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Update: 2017-10-31 23:00 GMT
மேட்டூர்,

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கடந்த சில மாதங்களாக பரவலாக பெய்தது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் மளமளவென நிரம்பி வந்தன. இதனால் அந்த இரு அணைகளில் இருந்தும் தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அதே நேரத்தில் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான பிலிகுண்டுலு, நாட்ராம்பாளையம், ஒகேனக்கல் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்து, அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது. அணைக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி வரையில் நீர்வரத்து இருந்தது.

அணைநீர்மட்டம் 100 அடியை நெருங்கி வந்த அதே நேரத்தில், அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் கடந்த மாத இறுதியில் பருவமழையின் தாக்கம் குறைய தொடங்கியது. இந்த இரு காரணங்களால் அணையின் நீர்மட்டம் மீண்டும் குறைய தொடங்கியது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 13 அடி வரை நீர்மட்டம் குறைந்தது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை கை கொடுத்தால் மட்டுமே அணை நீர்மட்டம் உயரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 26-ந் தேதி பருவமழை தொடங்கியது. தற்போது கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை அதிகம் பெய்து வருகிறது.

டெல்டா பகுதிகளில் பெய்யும் பரவலான மழை எதிரொலியாக, மேட்டூர் அணையில் இருந்து பாசன தேவைக்காக திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. இந்த தண்ணீர் திறக்கும் அளவு நேற்று முன்தினம் நள்ளிரவில் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக மேலும் குறைக்கப்பட்டது.

அதே நேரத்தில் நேற்று முன்தினம் வினாடிக்கு 2 ஆயிரத்து 556 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் வினாடிக்கு 4 ஆயிரத்து 675 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85.09 அடியாக இருந்தது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரித்து அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடிக்கு மேல் அதிகரிக்குமானால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கும் என்று பொதுப்பணித்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்