மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் பலி டேங்கர் லாரி மோதியது

சீர்காழி அருகே டேங்கர் லாரி மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் பலியானார்கள்.;

Update:2017-11-01 04:30 IST
சீர்காழி,

நாகை மாவட்டம், சீர்காழி அருகே ராதாநல்லூர் காலனி தெருவை சேர்ந்த மதியழகன் மகன் அருண்ராஜ் (வயது 24). மேலநாங்கூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் பிரகாஷ் (24), அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் பழனிசாமி (24). இவர்கள் 3 பேரும் டிரைவர்கள். நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் தென்னலக்குடியில் இருந்து நாங்கூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பழனிசாமி ஓட்டினார். தென்னலக்குடி மேலச்சாலை வளைவில் சென்றபோது எதிரே ரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அருண்ராஜ், பிரகாஷ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும், படுகாயம் அடைந்த பழனிசாமி 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனிசாமியும் இறந்து போனார். இதுகுறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன்கோவில் போலீசார், விபத்தில் பலியான அருண்ராஜ், பிரகாஷ் ஆகியோரின் உடலை சீர்காழி அரசு மருத்துவமனைக்கும், பழனிசாமியின் உடலை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேங்கர் லாரி டிரைவர் கடலூர் மாவட்டம், ஒரத்தூர் மேட்டுத்தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் சக்திவேல் (31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்