அனைத்து நிலுவை வரிகளையும் சரியான நேரத்தில் செலுத்தவேண்டும் வருமானவரித்துறை அதிகாரி பேச்சு

அரசு திட்டங்களை செயல்படுத்த பொதுமக்கள் அனைத்து நிலுவை வரிகளையும் சரியான நேரத்தில் செலுத்தவேண்டும் என்று வருமானவரித்துறை அதிகாரி பேசினார்.

Update: 2017-10-31 22:45 GMT
வேலூர்,

காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தூய பண நடவடிக்கை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் செல்வராஜன் மற்றும் மஞ்சுளா மகிமைசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.சி.சி.அலுவலர் க.ராஜா வரவேற்றார்.

நிகழ்ச்சியில் வருமான வரித்துறை அதிகாரி சுரேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தூய பண நடவடிக்கை என்பது மத்திய அரசின் விழிப்புணர்வு திட்டமாகும். வியாபாரம் மற்றும் பல்வேறு தொழில் முனைவோர்கள் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் வருமானம் பெற்றால் அவர்கள் வருமானவரி படிவங்களை நிரப்பி, அதில் தனது வருமானத்தை குறிப்பிட்டு வருமானவரித்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ரூ.5 லட்சத்துக்குமேல் வருமானம் பெற்றால், வருமானவரி படிவங்களை ஆன்லைன்மூலம் சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொருவரும் வருமானவரி படிவங்களை குறித்த நேரத்தில் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும். அதில் சரியான வருமானத்தை காட்ட வேண்டும். வருமானம் தொடர்பான அனைத்து நிலுவை வரிகளையும் சரியான நேரத்தில் செலுத்தவேண்டும்.

மக்கள் செலுத்தும் வரிகளைகொண்டுதான் வருங்கால கல்வி வளர்ச்சி, மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் போன்ற அரசு திட்டங்களை நிறைவேற்றமுடியும்” என்றார்.

அதைத்தொடர்ந்து அவர் தூயபண நடவடிக்கை குறித்த உறுதிமொழியை வாசிக்க அனைவரும் திரும்பக்கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முடிவில் ஆசிரியர் குணசேகரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்