கூடலூரில் நடந்த முகாமில் கந்து வட்டி வசூலித்ததாக போலீஸ்காரர் மீது புகார்

கூடலூரில் நடந்த முகாமில் போலீஸ்காரர் மீது கந்து வட்டி வசூலித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

Update: 2017-10-31 23:15 GMT

கூடலூர்,

தமிழகத்தில் கந்து வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீளமுடியாமல் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. கந்து வட்டி கொடுமைக்கு சமீபத்தில் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு குடும்பமே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது. இதில் 2 குழந்தைகள், கணவன், மனைவி உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து கந்து வட்டியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு போலீசாருக்கு உத்தரவிட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்களிடம் புகார் பெறும் சிறப்பு முகாம்கள் அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களின் உட்கோட்டங்களில் நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதையொட்டி கூடலூரில் சிறப்பு முகாம் நேற்று காலை 10 மணிக்கு ஜானகியம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முகாமுக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், சவுந்திரராஜன், சப்– இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், நசீர், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் கூடலூர் அத்திப்பாளியை சேர்ந்த டீக்கடைக்காரர் சம்சுதீன் கலந்து கொண்டு துணை போலீஸ் சூப்பிரண்டு பஞ்சாட்சரத்திடம் புகார் அளித்தார். அதில் அவர் கூறி உள்ளதாவது:–

கடந்த 2010–ம் ஆண்டு கூடலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவரிடம் ரூ.3 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கினேன். இதற்காக எனது வீட்டு பத்திரத்தை வாங்கி கொண்டு பணத்தை கொடுத்தார். இதுவரை வட்டி, அசல் சேர்த்து ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் திரும்ப கட்டி விட்டேன். ஆனால் எனது வீட்டு பத்திரத்தை திரும்பி தராமல் இன்னும் ரூ.2 லட்சம் வழங்கினால் மட்டுமே பத்திரத்தை தருவதாக மிரட்டி வருகிறார். எனவே கந்து வட்டி தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் அதற்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்தார்.

இதேபோல் அரசு பெண் ஊழியர் ஒருவர் கண்ணீருடன் போலீசாரிடம் புகார் மனு அளித்தார். அதில் தான் வாங்கிய ரூ.2 லட்சம் கடனை வட்டி, அசலுமாக திரும்ப செலுத்தி விட்டேன். ஆனால் கடன் வாங்குவதற்கு முன்பு என்னிடம் காசோலைகளில் கையெழுத்து வாங்கி கொண்டனர். தற்போது கூடுதல் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். இதனால் கூடுதல் பணத்தை வழங்க மறுத்து விட்டதால் கையெழுத்து வாங்கிய காசோலைகளை பல ஊர்களில் உள்ள வங்கிகளில் செலுத்தி என் மீது காசோலை மோசடி வழக்குகள் போடப்பட்டுள்ளன. எனவே உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.

கூடலூர் பகுதியை சேர்ந்த பலர் கந்து வட்டி குறித்து புகார் அளித்தனர். அதில் போலீஸ்காரர் மீது பல்வேறு புகார்களை தெரிவித்து உள்ளனர். இது சம்பந்தமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனிடையே போலீசார் நடத்திய முகாமில் குறைந்த அளவிலேயே ஆட்கள் வந்து இருந்தனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, பாதிக்கப்பட்டவர்கள் எழுத்து பூர்வமாக நேரில் வந்து புகார் தெரிவிக்கலாம். அதற்காகவே மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விசாரணை முடிவில் தமிழ்நாடு அதிக வட்டி வசூலித்தல் தடுப்பு சட்டம் 2003–ன்படி சட்டப்பரிவு–4 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கந்து வட்டி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இன்று (புதன்கிழமை) பந்தலூர் வணிக வளாகத்திலும், நாளை (வியாழக்கிழமை) ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியிலும், 3–ந் தேதி குன்னூர் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளன. முகாம்களில் நேரடியாக வந்து புகார் கொடுக்க முடியாதவர்கள் நீலகிரி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு அலுவலகங்களில் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்