கந்து வட்டி பிரச்சினைக்கு தீர்வு காண பொதுமக்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும் - முத்தரசன் பேட்டி

கந்து வட்டி பிரச்சினைக்கு தீர்வு காண பொதுமக்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

Update: 2017-10-31 23:45 GMT
ஈரோடு,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 27-ந் தேதி தொடங்கும் என்று சென்னை வானிலை மையம் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே முன் எச்சரிக்கை செய்து இருந்தது. அதன்படி கடந்த 27-ந் தேதி மழை தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) சென்னையில் சில மணி நேரம் விட்டு விட்டு மழை பெய்தது. சில மணி நேரம் பெய்த அந்த மழையிலேயே சென்னை மாநகரம் தண்ணீரில் தத்தளித்தது. வடகிழக்கு பருவமழை குறித்து முன்கூட்டியே தெரிவித்தும் தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது.

தமிழகத்தில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. மதுரையில் கிரானைட் கொள்ளை குறித்து விசாரிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழு அமைக் கப்பட்டது. அவர் நேர்மையாக விசாரணை நடத்தி மதுரையில் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக 212 பரிந்துரைகளை கோர்ட்டில் சமர்ப்பித்தார். மேலும் மத்திய குற்றப்புலனாய்வு துறை (சி.பி.ஐ.) விசாரணை வேண்டும் என்றும் கோரினார்.

இதுதொடர்பான விசாரணையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை என்றும், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அளித்த பரிந்துரைகளில் சில மட்டுமே செயல்படுத்த முடியும் என்று பதில் அளித்து உள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கூறியதுபோன்று சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், இந்த விசாரணையானது தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.

மதுரையில் மட்டுமே ரூ.1 லட்சம் கோடி இழப்பு என்றால், தமிழகம் முழுவதும் எவ்வளவு இழப்பு என்பதை கண்டறிய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும்.

மத்திய அரசு உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து வருகிற 8-ந் தேதியுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. ஆனால் மத்திய அரசு கூறிய எந்த நோக்கமும் நிறைவேறவில்லை. எனவே வருகிற 8-ந் தேதி கருப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஈரோட்டில் எங்கள் கட்சி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் த.பாண்டியன் பங்கேற்கிறார்.

ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை ரூ.25 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று தமிழக அமைச்சர்கள் மத்திய அரசை கைகாட்டுகிறார்கள்.

2003-ம் ஆண்டு கந்து வட்டிக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கந்து வட்டி கொடுப்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வங்கிகளில் கடன் பெறுவதில் ஏற்படும் சிக்கல்களால்தான், பொதுமக்கள் கந்து வட்டி வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே வங்கிகள் மூலம் உரிய கடன் வழங்கி கந்து வட்டி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறினார். பேட்டியின்போது மாநிலக்குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன், மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்