செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்தது
செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்து உள்ளது. நீர்வரத்து அதிகம் வருவதால் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூந்தமல்லி,
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இடைவிடாது மழை பெய்தது. இதனால் ஏரி, குளங்கள், குட்டைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது.
கால்வாய்கள் வழியாக மழைநீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வருவதால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு ஏரி நீர்மட்டம் 6 அடியாக இருந்தது. தற்போது பெய்த மழையால் ஒரே நாளில் 1½ அடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. நீர்மட்டம் நேற்று 7½ அடியாக இருக்கிறது.
ஏரியின் நீர் இருப்பு 452 மில்லியன் கனஅடி ஆகவும், ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,719 கன அடியாகவும் உள்ளது. சென்னை மாநகர குடிநீருக்கு வினாடிக்கு 52 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 17 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மிகவும் வறண்டு கிடந்த செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளதால் சுற்றுலா இடம் போல காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து ஏரியை பார்த்துவிட்டு செல்கின்றனர். மேலும் ஏரியில் மீன்கள் அதிக அளவில் கிடைப்பதால் மீன் பிடிக்கும் தொழில் செய்பவர்களும் உற்சாகமாக மீன்பிடித்து வருகின்றனர்.
ஏரிக்கு வரும் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு உள்ளதால் மழை நீர் தங்குதடையின்றி வருவதாகவும், மழை தொடர்ந்தால் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.