ஆவடி அருகே இந்து கல்லூரி ரெயில் நிலைய தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது அதிகாலையில் நடந்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு
ஆவடி அருகே இந்து கல்லூரி ரெயில் நிலையத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. அதிகாலை நேரத்தில் நடந்ததால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஆவடி,
ஆவடியை அடுத்த இந்து கல்லூரி ரெயில் நிலையம் கல்லூரியின் அருகாமையில் அமைந்துள்ளது. அன்றாடம் வேலைக்கு, பள்ளிக்கு, கல்லூரிக்கு என பல்வேறு காரணங்களுக்காக ரெயில்களில் செல்லக்கூடிய சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதில் சாலைகளில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. குறிப்பாக ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, திருநின்றவூர், திருமுல்லைவாயல், பட்டாபிராம் மற்றும் சி.டி.எச். சாலை, உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது.
நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் சாலைகளில் தேங்கி உள்ள மழை நீரை மோட்டார் மூலம் அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை இந்து கல்லூரி ரெயில் நிலையத்தில் இருந்த தடுப்பு சுவர் சுமார் 80 மீ தூரத்துக்கு இடிந்து, விழுந்து தரை மட்டமானது.
அதிகாலை நேரம் என்பதால் அங்கு பயணிகள் யாரும் இல்லாததால் உயிர்சேதம், படுகாயம் போன்ற அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டன.
இதையடுத்து, 2 ஜேசிபி எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தடுப்பு சுவரின் எஞ்சிய பகுதி இடித்து தள்ளப்பட்டது.