சென்னை புறநகரில் வெள்ளப்பெருக்கை தடுப்பதற்காக முட்டுக்காடு முகத்துவார மணல்மேட்டை அகற்றும் பணி தீவிரம்
சென்னை புறநகரில் வெள்ளப்பெருக்கை தடுப்பதற்காக முட்டுக்காடு–பக்கிங்காம் கால்வாய் முகத்துவாரத்தில் உள்ள மணல் மேட்டை அகற்றும்பணியில் ராட்சத எந்திரம் மூலம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
திருப்போரூர்,
சென்னை புறநகர் பகுதிகளான வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை மற்றும் காஞ்சீபுரம் மாவட்டம் தாம்பரம், கேளம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் தாழ்வாக உள்ளன. இதனால் மழைக்காலங்களில் இந்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொது மக்களுக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழையால் சென்னை நகர் மற்றும் புறநகரில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும் தொடரும் மழையால் இந்த பகுதிகள் மிகவும் பாதிக்கப்படும் என கருதி பொதுப்பணித்துறையினர் அதனை தடுக்க முன்எச்சரிக்கையாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
மழைவெள்ளம் பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலில் சென்றடைவதற்கு வசதியாக பொதுப்பணித்துறையினர் முட்டுக்காடு முகத்துவாரம்(கடலில் சேரும் இடம்) பகுதியில் மணல் மேடாக உள்ளது. இதனால் மழைவெள்ளம் கடலுக்குள் செல்லாமல் எதிர்திசையில் சென்று புறநகர் பகுதியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் நிலை உள்ளது.
கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் பக்கிங்காம் கால்வாயில் வரும் வெள்ளம் முட்டுக்காடு முகத்துவாரத்திற்கு செல்லமுடியாமல் மணல் மேடு அடைத்து உள்ளது. இந்த மணலை அகற்றி மழை வெள்ளம் தங்குதடையின்றி முகத்துவாரம் வழியாக கடலுக்கு செல்ல முகத்துவார மணல் மேட்டை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணிகள் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் பாலமோகன முருகன் மற்றும் உதவி பொறியாளர் திலீப்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 4 ராட்சத எந்திரம் மூலம் மணல் மேடு அகற்றும் பணிகள் நேற்று தொடங்கியது.
இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மணல் அகற்றும் பணிகள் பருவமழை முடியும் வரை இங்கு முழுவதுமாக மணல் அகற்றப்படும்’ என தெரிவித்தார்.