மழைக்கால தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் கலெக்டரிடம் தி.மு.க.வினர் மனு

விழுப்புரம் மாவட்டத்தில் மழைக்கால தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டரிடம் தி.மு.க.வினர் மனு கொடுத்தனர்.;

Update: 2017-10-31 22:45 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் நேற்று மாலை தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் ராதாமணி எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன், நகர தலைவர் சக்கரை, துணை செயலாளர் புருஷோத்தமன், ஒன்றிய செயலாளர் கல்பட்டு ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

விழுப்புரம் நகரில் பிரதான கழிவுநீர் வாய்க்காலான கோலியனூரான் வாய்க்கால் சரியாக பராமரிக்கப்படாததால் வாய்க்காலில் பிளாஸ்டிக் மற்றும் கழிவுப்பொருட்கள் சேர்ந்து நோய் பரப்பும் இடமாக மாறியுள்ளது. எனவே வாய்க்காலில் உள்ள கழிவு பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி அந்த வாய்க்காலை சீரமைக்க வேண்டும், மழைக்காலங்களில் வருகின்ற நீரை ஏரியில் சேமிக்க தென்பெண்ணையாற்று கிளை வாய்க்காலை சீரமைக்க வேண்டும்.

மழைக்காலங்களில் விழுப்புரம் நகரின் போக்குவரத்து பிரச்சினையை தீர்க்க விழுப்புரம்– சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் கட்டி முடிக்கப்படாத மேம்பால பணிகளை துரிதப்படுத்தி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தின் கடலோர பகுதியான கோட்டக்குப்பம், மழைக்காலங்களில் அதிகமாக பாதிக்கப்படுகிறது. அதை தடுக்க முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அந்த பகுதியில் பொதுமக்கள் தங்குவதற்கான பேரூராட்சி சமுதாயக்கூடம் போதிய பராமரிப்பின்றி உள்ளது. அவற்றை சீரமைக்க வேண்டும். உடனடியாக கடற்கரையோரம் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்.

விழுப்புரம் நகரத்தில் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் சரியாக பயன்பாட்டில் இல்லாததால் கொசுக்கள் பரவி நோய் உருவாக காரணமாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மாவட்டம் முழுவதும் மழை பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மனுவை பெற்ற கலெக்டர் சுப்பிரமணியன், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

மேலும் செய்திகள்