கொடைரோடு அருகே லாரியில் உரசிவிட்டு கடைக்குள் புகுந்த கார் பெண் பலி

கொடைரோடு அருகே லாரியில் உரசிவிட்டு கடைக்குள் கார் புகுந்ததில் பெண் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2017-10-31 22:45 GMT

கொடைரோடு,

கொடைரோடு அருகேயுள்ள குல்லலக்குண்டு ஊராட்சி கல்லடிப்பட்டியை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 55). அவருடைய மனைவி பெரியகருப்பி (50). இவர்கள் பள்ளப்பட்டி மாவூர் அணை பிரிவு பகுதியில் 4 வழிச்சாலையோரத்தில் பெட்டிக்கடையுடன், டீக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

நேற்று கடையில் பெரியகருப்பி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அந்த வேளையில் மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார், முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றது. அப்போது லாரி மீது கார் உரசியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த பெரியகருப்பியின் கடைக்குள் புகுந்தது. மேலும் லாரியும் சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.

கண்இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் கடை சுக்குநூறாக நொறுங்கியது. கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெரியகருப்பி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் பள்ளப்பட்டியை சேர்ந்த கர்ணன் (55) என்பவரும் படுகாயம் அடைந்தார். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் தப்பியோடி விட்டார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்–இன்ஸ்பெக்டர் தயாநிதி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் காயம் அடைந்த கர்ணனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான பெரியகருப்பியின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்