குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2017-10-31 22:45 GMT

கடமலைக்குண்டு,

கடமலை–மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறை ஊராட்சியில் உப்புத்துரை, ஆட்டுபாறை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 500–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, போதிய மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன. இதனால் கடந்த ஒரு வருடமாக 2 கிராமங்களிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைக்கருத்தில் கொண்டு கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, அருகே உள்ள யானைகஜம் ஆற்றில் உறை கிணறு அமைக்க ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய உறைகிணறு அமைக்கும் பணி தொடங்கியது. உறை கிணறு அமைக்கும் பணி முடிவடைந்தது. அதில் இருந்து கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது.

ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக அந்த பணி முழுமையாக நிறைவு பெறவில்லை. ஆட்டுபாறை கிராமம் வரை மட்டுமே குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனால் உப்புத்துரை கிராமத்தில் தொடர்ந்து குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து, உப்புத்துரை வரை குழாய் பதித்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த உப்புத்துரை கிராமத்தை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள், தங்களது கிராமத்துக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், ஜெகதீசசந்திரபோஸ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து ஆட்டுபாறையில் இருந்து உப்புத்துரை கிராமம் வரை குழாய் அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்