நெல்லை மாவட்ட அணைப்பாசன பகுதியில் நெல் நடவு பணிக்கு 13 ஆயிரம் ஏக்கரில் நாற்றுபாவும் பணி தொடங்கியது

நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைப்பாசன பகுதியில் பிசான நெல் சாகுபடிக்கு 13 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நாற்று பாவும் பணி நடந்து வருகிறது.

Update: 2017-10-31 21:00 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைப்பாசன பகுதியில் பிசான நெல் சாகுபடிக்கு 13 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நாற்று பாவும் பணி நடந்து வருகிறது.

நெல் நடவு பணி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. ஏற்கனவே கடந்த மாதம் 5 நாட்கள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் பாபநாசம் அணை நீர்மட்டம் 90 அடியை எட்டியது.

இதைத்தொடர்ந்து பாபநாசம் அணையில் இருந்து பிசான நெல் சாகுபடிக்காக தண்ணீர் 504 கன அடி தண்ணீர் கடந்த 6–ந்தேதி திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதையடுத்து கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளில் இருந்தும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதையொட்டியும், வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதாலும் பாபநாசம், கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் அணை உள்ளிட்ட அணை தண்ணீர் மூலம் பாசனம் பெருகின்ற அம்பை, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, முன்னீர்பள்ளம், கோபாலசமுத்திரம், முக்கூடல், கடையம், ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், தென்காசி, மேக்கரை, வடகரை, கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே நாற்று பாவிய 15 ஆயிரம் ஏக்கரில் நெல் நாற்று நடவு செய்யப்பட்டு உள்ளது.

நாற்று பாவும் பணி

மேலும் கடைமடை பகுதி மற்றும் அணையின் கால்வாய் பகுதிகளில் உள்ள 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நெல் நடவு செய்வதற்காக 13 ஆயிரம் ஏக்கர் பிசான நெல் சாகுபடிக்கு நாற்று பாவும் பணி கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. நாற்று பாவிய 22 நாட்களில் இருந்து நடவு பணி செய்யலாம் என்பதால் இன்னும் ஒரு வாரத்திற்குள் 1 லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்யும் பணி முடிந்து விடும். திருந்திய நெல் சாகுபடியில் நாற்றுபாவிய 14 நாட்களுக்குள் நடவு செய்யலாம். எனவே பல விவசாயிகள் திருந்திய நெல் சாகுடியிலும், நேரடியாக நெல்லை விதைத்து சாகுபடி செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது தவிர வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் கிணற்று பாசனத்திலும் நெல் நடவு பணி நெல்லை மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கரில் நடப்பதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

இது குறித்து நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) செந்தில்வேல்முருகன் கூறியதாவது:–

மானாவாரி பயிர்கள்

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதையொட்டி விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது அணை பாசன பகுதி மற்றும் குளத்து பாசனம், கிணற்று பாசனம் எல்லாம் சேர்ந்து 1 லட்சத்து 59 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு பணி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு இந்த பருவத்திற்கு உரிய நெல் விதைகளான ஆடுதுறை–49, ஆடுதுறை–45, கோ–51, அம்பை–16, திருச்சி–43, ஜே.டி.எல்., எல்.எல்.ஆர். ஆகிய ரகங்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. கடையம், அம்பை, செங்கோட்டை, கடையநல்லூர், சேரன்மாதேவி ஆகிய பகுதிகளில் 15 ஆயிரம் ஏக்கரில் நெல் நாற்று நடவு செய்யப்பட்டு உள்ளது. மற்ற இடங்களில் இந்த மாத இறுதிக்குள் நடவு பணி முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குருவிகுளம், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர் ஆகிய பகுதிகளில் மானாவாரி பயிர்களான சிறுதானியங்கள் எனப்படும் மக்காசோளம் 20 ஆயிரம் ஏக்கரிலும், உளுந்து 15 ஆயிரம் ஏக்கரிலும், பாசி பயிறு 20 ஆயிரம் ஏக்கரிலும் பயிரிடப்பட்டு உள்ளது. இன்னும் 45 ஆயிரம் ஏக்கரில் சிறுதானிய பயிர்கள் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்