பணகுடி அருகே கார் மோதி, கோழி வியாபாரி பலி டிரைவர் கைது

பணகுடி அருகே கார் மோதியதில், கோழி வியாபாரி பலியானார். இந்த விபத்து தொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-10-31 20:30 GMT

பணகுடி,

பணகுடி அருகே கார் மோதியதில், கோழி வியாபாரி பலியானார். இந்த விபத்து தொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கோழி வியாபாரி

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள சிதம்பராபுரத்தை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது 65). இவர் தனது வீட்டில் சொந்தமாக நாட்டுக் கோழிகளை வளர்த்து வந்தார். அதனை கடைகளுக்கும், வள்ளியூர் சந்தைக்கும் சென்று கொடுத்து விற்பனை செய்து வந்தார்.

நேற்று காலையில் பால்ராஜ் வழக்கம்போல் தனது சைக்கிளில் கோழிகளை கட்டிக் கொண்டு பணகுடி தெற்கு பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

கார் மோதி பலி

அங்குள்ள ரோட்டை அவர் சைக்கிளில் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் அவர் மீது மோதியது. இதில் பால்ராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் பணகுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பால்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கார் டிரைவர் கைது

இந்த விபத்து தொடர்பாக பணகுடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஆன்டோ பிரதீப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி காரை ஓட்டி வந்த கேரள மாநிலம் பாலராமபுரத்தை சேர்ந்த வின்சென்ட் மகன் அபினை(வயது 24) கைது செய்தனர்.

மேலும் செய்திகள்