ராஜராஜசோழன் சதயவிழாவையொட்டி பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான அபிஷேகம்

மாமன்னன் ராஜராஜசோழன் சதயவிழாவையொட்டி பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;

Update:2017-10-31 04:15 IST
தஞ்சாவூர்,

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையில் பெரியகோவிலை உருவாக்கி இன்று வரை தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்து இருப்பவர் மாமன்னன் ராஜராஜசோழன். இந்த கோவிலின் கட்டிடக்கலை மற்றும் கலையம்சம் காரணமாக அதனை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா தஞ்சை பெரியகோவிலில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாமன்னன் ராஜராஜசோழனின் 1032-வது ஆண்டு சதயவிழா நேற்றுமுன்தினம் தொடங்கியது. முதல்நாளில் மங்களஇசை, கருத்தரங்கம், கவியரங்கம் நடைபெற்றது. நேற்று காலை 2-வது நாள் நிகழ்ச்சி மங்கள இசையுடன் தொடங்கியது.

பின்னர் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்களுக்கும் திருவேற்காடு கருமாரி பட்டர் அய்யப்பசுவாமிகள் புத்தாடைகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து தஞ்சை பெரியகோவில் கோபுரம் போன்று வடிவமைக்கப்பட்ட தேரில் ஓதுவார்கள் பாடியபடி திருமுறை வீதி உலா 4 ராஜவீதிகளிலும் வலம் வந்து கோவிலை அடைந்தது. அதைத்தொடர்ந்து பெருவுடையார்-பெரியநாயகி அம்மன் திருமேனிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. திருவேற்காடு கருமாரிபட்டர் அய்யப்பசுவாமி பொறுப்பேற்று இந்த அபிஷேகத்தை 40-வது ஆண்டாக நடத்தினார்.

இதில் பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு வில்வஇலை, வன்னிஇலை, நொச்சிஇலை, பிச்சிஇலை, அத்திகொழுந்து, ஆலம்கொழுந்து, மாங்கொழுந்து, பலாகொழுந்து, விளாகொழுந்து உள்ளிட்ட 10 வகையான இலைகளால் அபிஷேகம் நடந்தது. மேலும் விபூதி, தைலக்காப்பு, சாம்பிராணி தைலம், திரவியப்பொடி, வாசனைப்பொடி, மஞ்சள்பொடி, அரிசிமாவுப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், மாதுளை, ஆரஞ்சு, அன்னாசி, திராட்சை, விளாம் பழம், சாத்துக்குடி, எலுமிச்சை, இளநீர், சந்தனம், பன்னீர், கருப்பஞ்சாறு, அன்னாபிஷேகம் என மொத்தம் 48 வகையான அபிஷேகம் நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிற்பகலில் மங்களஇசை, திருமுறை அரங்கம், கிராமியபல்சுவை நிகழ்ச்சி, திருமுறை பண்ணிசைஅரங்கம், பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றன. மாலையில் தருமபுர இளைய ஆதினம் மாசிலாமணி ஞானசம்பந்த தேசிகசுவாமிகள் முன்னிலையில் பெருவுடையார்-பெரியநாயகி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மேலும் மாமன்னன் ராஜ ராஜசோழன் சிலைக்கு ஆயிரமாவது முடிசூட்டு விழாவின்போது காஞ்சிகாமகோடி பீடம் சங்கராச்சாரிய சுவாமிகளால் அளிக்கப்பட்ட தங்ககிரீடம் அணிவிக்கப்பட்டு, 50-க்கும் மேற்பட்ட இசைகருவிகளுடன் இசை கலைஞர்களின் இன்னிசையுடனும், கிராமிய கலைநிகழ்ச்சிகளுடனும் 4 ராஜவீதிகளிலும் வீதிஉலா நடைபெற்றது.

மேலும் செய்திகள்