நடைபாதை வியாபாரிகளுக்கு எதிரான பேரணியில் நவநிர்மாண் சேனா கட்சி பிரமுகரின் மண்டை உடைப்பு

மலாடியில் நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக நடந்த பேரணியின் போது நவநிர்மாண் சேனா கட்சி பிரமுகரின் மண்டை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-10-28 21:34 GMT

மும்பை,

மலாடியில் நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக நடந்த பேரணியின் போது நவநிர்மாண் சேனா கட்சி பிரமுகரின் மண்டை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் மனு

மும்பை எல்பின்ஸ்டன் ரோடு ரெயில் நிலைய நடைமேம்பாலத்தில் கடந்த மாதம் கூட்டநெரிசலில் சிக்கி 23 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு சட்டவிரோதமாக நடைபாதை வியாபாரிகள் தான் காரணம் என நவநிர்மாண் சேனா கட்சி குற்றம் சாட்டியது. இது மட்டும் இல்லாமல் ரெயில் நிலையத்தை யொட்டி ஆக்கிரமித்து வரும் நடைபாதை வியாபாரிகளை விரட்டி அடித்து அவர்களின் பொருட்களை சூறையாடி வருகின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் நடைபாதை வியாபாரிகளை பாதுகாக்க கோரி போலீஸ் கமி‌ஷனர் தத்தாராய் பட்சல்கிகரை சந்தித்து மனு கொடுத்து இருந்தனர்.

கட்சி பிரமுகர் மீது தாக்குதல்

இந்த நிலையில் நேற்று மலாடு ரெயில் நிலையம் அருகில் நவநிர்மாண் சேனா கட்சியினர் நடைபாதை வியாபாரிகளை கண்டித்து பேரணி நடத்தினர். அப்போது அங்கிருந்த நடைபாதை வியாபாரிகளில் சிலர் பேரணி நடத்திய சிலர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கட்சி பிரமுகர் சுஷாந்த் மகாதாலே என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது ரத்தம் வழிந்தோடியது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட நவநிர்மாண் சேனா கட்சியினர் காயமடைந்த சுஷாந்த் மகாதாலேவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2 பேர் கைது

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டதாக 2 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் சுஷாந்த் மகாதாலேவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி நடைபாதை வியாபாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தார். இந்த சம்பவத்தினால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக நடந்த பேரணியில் நவநிர்மாண் சேனா பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவத்தால் மலாடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்