ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்று செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.;

Update:2017-10-27 04:45 IST
திருச்சி,

திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. விழா மேடை அருகே எம்.ஜி.ஆர். பற்றிய புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியில் எம்.ஜி.ஆர். நடித்த முக்கியமான திரைப்படங்களின் தொகுப்பு, அவர் பங்கேற்ற அரசியல் நிகழ்ச்சிகள், 1977- ம் ஆண்டு முதல் முறையாக எம்.ஜி.ஆர். தமிழக முதல் - அமைச்சராக பதவி ஏற்ற காட்சிகள், அப்போதைய அவரது அமைச் சரவை, அதன் பின்னர் எம்.ஜி.ஆர். முதல் - அமைச்சராக பதவி ஏற்றபோது எடுக்கப்பட்ட படம் ஆகியவை இடம் பெற்று இருந்தன.

இது தவிர இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது தஞ்சாவூர் பெரிய கோவில் வளாகத்தில் எம்.ஜி.ஆர். அவருடன் பங்கேற்ற காட்சிகள், மற்றும் பெரியார், அண்ணா, காமராஜர், போப் ஆண்டவர், அன்னை தெரசா, நடிகர் சிவாஜி, கவிஞர் கண்ண தாசன் ஆகியோருடன் எம்.ஜி.ஆர். பங்கேற்ற நிகழ்ச்சிகள் படத் தொகுப்புகள் இடம் பெற்று இருந்தன. இந்த கண்காட்சியை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் செங்கோட்டையன், தங்கமணி, கடம்பூர் ராஜூ, அன்பழகன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்பட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக நடத்துவோம் என ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். ஜெயலலிதாவின் லட்சியப்படி அவரது வழியில் நடைபெற்று வரும் இந்த அரசு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மாவட்டந்தோறும் கொண்டாடி வருகிறது.

இதுவரை பல மாவட்டங்களில் நடந்து முடிந்துள்ளது. நெல்லை உள்பட சில மாவட்டங்களில் இன்னும் நடைபெற வேண்டியது உள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தி முடிக்கப்பட்டு விடும்.

2018 ஜனவரி மாதம் சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுவார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்த விழாவில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான பல திட்டங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது மாவட்டந்தோறும் பெரியார் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு, இறுதியாக சென்னையில் நடைபெற்ற நிறைவு விழாவில் பல வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. இருவரும் இணக்கமாக தான் உள்ளனர். அரசு விளம்பரங்களில் துணை முதல்-அமைச்சர் படம் வைக்கப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கட்சி சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்