4–வது நாளாக வேலைநிறுத்தம் படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் உள்பட மீனவர்கள் கைது

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சீன மோட்டார் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 4–வது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தம் நடந்தது.

Update: 2017-10-22 22:15 GMT

ராயபுரம்,

பைபர் படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் மற்றும் சில மீனவர்களை கைது செய்ததால் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிக சக்தி கொண்ட சீன மோட்டார் என்ஜின் பொருத்தி விசைப் படகுகளில் மீன் பிடிப்பதை கண்டித்து பைபர் படகு மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலில் படகுகளை நிறுத்தி முற்றுகை போராட்டமும் நடத்தினார்கள்.

இந்த வேலைநிறுத்தம் தொடர்ந்து நேற்று 4–வது நாளாக நடைபெற்றது. போராட்டத்தின்போது சீன மோட்டாருக்கு ஆதரவாக செயல்படும் அமைச்சர் ஜெயக்குமாரை கண்டித்தனர்.

இந்த நிலையில், பைபர் படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் தியாகுவையும், அவருடன் சில மீனவர்களையும் காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினரும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சீன மோட்டாருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக முறையில் பைபர் படகு உரிமையாளர்கள் போராடினர். மீன்வளத்துறையை சேர்ந்தவர்கள் வீடு, வீடாக சென்று மீனவர்களை அழைத்துச் சென்று போலீஸ் நிலையத்தில் விட்டுள்ளனர். பைபர் படகு சங்க தலைவர் தியாகு என்பவரின் மனைவியை போலீசார் அழைத்துச்சென்றனர். தியாகு போலீஸ் நிலையம் சென்றவுடன் அவரது மனைவியை விட்டுவிட்டனர்.

சீன மோட்டாரை பயன்படுத்தும் கேரளாவை சேர்ந்த ஜெகன் என்பவருக்காக மீன்வளத்துறையே வேலை செய்கிறது. அமைச்சர் ஜெயக்குமார் வீட்டுக்கு ஒரு ஆண், ஒரு பெண்ணை கைது செய்தால் அவர்கள் போராட்டம் செய்யமாட்டார்கள் என தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தியாகுவை விடுவிக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்